புதுடெல்லி – இந்தியாவில் இனி அரசியல் தலைவர்கள், அரசாங்க உயரதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் தங்களது வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கைப் பயன்படுத்தி வந்தனர்.
கௌரவச் சின்னமாகப் பார்க்கப்பட்ட சிவப்பு சுழல் விளக்கு, சாலைகளில் அந்த வாகனங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவும், போக்குவரத்து இடையூறின்றி வேகமாகப் பயனிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. அவசர ஊர்திகள், தீயணைப்பு வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் தவிர மற்றவை சிவப்பு சுழல் விளக்கைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது.
வரும் மே 1-ம் தேதி முதல் இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வருகின்றது.
இதனிடையே, “எல்லா இந்தியர்களுக்கும் சிறப்பு இருக்கிறது. எல்லா இந்தியர்களும் முக்கியப் பிரமுகர்கள் தான்” என்று மோடி இந்த புதிய தடை உத்தரவைக் குறிப்பிடும் வகையில் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.