Home Featured நாடு “நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் உழைப்பாளர்கள்”-சுப்ரா வாழ்த்து

“நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் உழைப்பாளர்கள்”-சுப்ரா வாழ்த்து

967
0
SHARE
Ad

subra-masean

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மலேசிய சுகாதார அமைச்சரும், ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தி:-

“உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் மே தின நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

#TamilSchoolmychoice

இந்த உலகம் உழைப்பவர்களாலே வாழ்கின்றது. அதனால் அஃது உழைப்பவர்களுக்கே சொந்தமானது என்றும், இத்தகைய பெருமையையும், சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது, ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் வகையில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

வியர்வை சிந்தி உழைப்பது என்பது கடினமானதாகக் கருதப்பட்டாலும், அதன் பலன்கள் இனிமையானவை என்பதை உணர்ந்து, உழைப்பின் மேன்மையை உள்ளத்தில் பதிய வைத்து, தங்களின் கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் இந்நாள் உரியதாகும்.

“படைப்பாற்றல் திறன் கொண்ட உழைப்பாளிகளே சிறந்த உற்பத்தியாளர்கள்” எனும் கருப்பொருளோடு மலேசியாவில் இவ்வாண்டு உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. அதன் அடிப்படையில், தற்பொழுது நாட்டில் ஏற்பட்டு பொருளாதார மந்த நிலையைச் சரிச் செய்ய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் தொழிலாளர்களின் படைப்பாற்றல் மிக மிக அவசியமாகும். தொழிலாளர்களின் படைப்பாற்றல் திறன் வழி நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை மேம்படுத்தி பொருளாதார நிலையைச் சீர் செய்ய முடியும்.

நமது நாட்டில் தன்னலம் கருதாது, மக்கள் நலனுக்காக நேரம் காலம் பாராது சுகாதாரச் சேவையை வழங்கி வரும் சுகாதார அமைச்சு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் சுகாதார அமைச்சர் என்னும் முறையில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தொழிலாளர்கள் அனைவரும் தொடர்ந்து நாட்டிற்கும் அவர்களது வீட்டிற்கும் தேவையான உழைப்பைப் படைப்பாற்றல் திறனோடு கொடுத்து நாட்டின் முதுகெலும்பாகத் திகழ வேண்டும் எனக்கூறி மீண்டும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”