கடந்த செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 25-ஆம் தேதி கோலாலம்பூரில் மஇகா தலைமையகக் கட்டடத்தின் நேதாஜி அரங்கத்தில் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதிய ‘மண்மாற்றம்’ நாவல், மற்றும் ‘செல்லியல் பார்வைகள்’ கட்டுரைத் தொகுப்பு என இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய செல்லியல் துணை ஆசிரியர் பீனிக்ஸ்தாசன், நூலாசிரியர் இரா.முத்தரசனுடனான தனது பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
“மண்மாற்றம்” நாவலுக்கு மலாயாப் பல்கலைக் கழக இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் எழுதி வழங்கிய ஆய்வுரையின் சில அம்சங்களை மின்னல் வானொலி அறிவிப்பாளர் பொன்.கோகிலம் நூல்வெளியீட்டு விழாவில் வாசித்தார். தவிர்க்க முடியாத காரணங்களால், வெளிநாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், முனைவர் கிருஷ்ணன் மணியம் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை.
எனினும், கிருஷ்ணன் மணியம் வழங்கிய ஆய்வுரையின் முழுவடிவம், மண்மாற்றம் நாவலில் இடம் பெற்றிருக்கிறது.
நூல் வெளியீட்டு விழாவில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி சிறப்புரையாற்றினார். மண்மாற்றம் நாவலில், தோட்டம் ஒன்று மேம்பாடு என்ற பெயரில் மாற்றம் கண்டு, வீடமைப்புத் திட்டமாகவும், கோல்ப் விளையாட்டுத் திடலாகவும் உருமாற்றம் காண்பதையும், அதனால் பாதிப்படைந்த ஒரு குடும்பம் அந்த மாற்றத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவதையும் இரா.முத்தரசன் எழுதியிருப்பதை தேவமணி தனதுரையில் சுட்டிக் காட்டினார். மாற்றங்களை நமக்கு சாதகமாக்கி முன்னேற வேண்டும் என்றும் தேவமணி மேலும் குறிப்பிட்டார்.
தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாக இயக்குநர் டத்தோ பி.சகாதேவன் சிறப்புரையை வழங்கினார்…
நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றிய டத்தோ எம்.சரவணன், அன்று தோட்டப் பிரச்சனைகளைப் பற்றி பேசியும், எழுதியும் வந்தோம், ஆனால் இன்று நாம் நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின்னர் மாதச் சம்பளத்தை அடைந்திருக்கும் காலகட்டத்தில், தோட்டங்களை வங்காள தேசத் தொழிலாளர்களும், இந்தோனேசியத் தொழிலாளர்களும் ஆக்கிரமித்திருக்கின்றனர் என்பதைத் தனதுரையில் அவர் சுட்டிக் காட்டினார். தோட்டப் பிரச்சனைத் தொட்டு எழுதியிருக்கும் இரா.முத்தரசனின் சமுதாயப் பார்வையையும் சரவணன் பாராட்டினார்.
டாக்டர் சுப்ராவிடம் இருந்து நூல் பெறும் டத்தோ எம்.சரவணன்…
வாழ்த்துரை வழங்கியதோடு, மின்னூல்களை இணையம் வழி வெளியிட்டு சிறப்பு செய்தார் செல்லியல் இணை தோற்றுநரும், செல்லினம், முரசு அஞ்சல் மென்பொருள் உருவாக்குநருமான முத்து நெடுமாறன். நவீனமயத்தை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கும் வேளையில் ஆங்கிலம், தமிழ் என இருமொழித் திறன் அவசியம் என வலியுறுத்திய முத்து நெடுமாறன், அந்த அம்சத்தில் தனக்கு சீனாவில் நேர்ந்த அனுபவங்களை சுவாரசியமாக விளக்கினார்.
ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் எழுதும் திறன் பெற்றிருந்த காரணத்தால்தான், இரா.முத்தரசனோடு, செல்லியலுக்காக இணையும் சூழல் ஏற்பட்டதாகவும் முத்து நெடுமாறன் விவரித்தார்.
முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நூல்களை படிப்பகத்தின் முன்னாள் தலைவரும், அறக்காப்பாளருமான வே.சிவராஸ் டாக்டர் சுப்ராவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
தனது பள்ளிப் பருவத்தில் இரவு வேளைகளில் பகுதி நேரமாக தனக்கு மலாய் மொழி போதித்தவர் வே.சிவராஸ் என்பதை நினைவுகூர்ந்த நூலாசிரியர் இரா.முத்தரசன், பள்ளிப் பருவத்தில் படிப்பதற்காக முத்தமிழ்ப் படிப்பகம் சென்றதையும் அங்கிருந்த எண்ணிலடங்காத தமிழ் நூல்களால் ஈர்க்கப்பட்டு தனது வாசிப்பு அனுபவம் தொடர்ந்ததாகவும், அதன் காரணமாகத்தான் தான் ஓர் எழுத்தாளனாக உருவாக முடிந்தது என்றும் தனதுரையில் குறிப்பிட்டார். அதற்காகத்தான் தான் எழுதிய நூல்களை முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு சமர்ப்பணம் செய்வதாகவும் முத்தரசன் மேலும் தெரிவித்தார்.
மரியாதைக்காக டான்ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்ட நூல்களை அவரது சார்பில் பெற்றுக் கொள்ள வந்த புவான்ஸ்ரீ தீனா சுப்ரமணியத்திற்கு திருமதி விக்னேஸ்வரி முத்தரசன் மாலை அணிவித்து சிறப்பு செய்கிறார்.
சுப்ராவிடம் இருந்து நூல்களைப் பெற்றுக் கொள்கின்றார் புவான்ஸ்ரீ தீனா சுப்ரமணியம்…
முதல் நூல் பெறுகின்றார் இந்தியக் குத்தகையாளர் சங்கத் தலைவர் டத்தோஸ்ரீ சுகுமாறன்…
தலைமையுரையாற்றிய டாக்டர் சுப்ரா…கட்சியையும், சமுதாயத்தையும் வழிநடத்துவதில் அனைவரையும் அரவணைத்தும், இணைத்தும் பணியாற்றப் போவதாக தனது உரையில் கூறினார். தமிழ் எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளுக்கு இனி மஇகா உதவும் என்ற அறிவிப்பையும் சுப்ரா நூல் வெளியீட்டு விழாவின்போது வெளியிட்டார்.
நூல்வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த மஇகா தகவல் பிரிவுத் தலைவர் வி.எஸ்.மோகன், மன்னர் மன்னன், டான்ஸ்ரீ ஜி.வடிவேலு ஆகியோர்…
வருகை தந்த முனைவர் முல்லை இராமையா, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன்…
நூல்களை வெளியிட்ட டாக்டர் சுப்ராவுடன், மின்னூல் பதிப்புகளை வெளியிட்ட முத்து நெடுமாறன்….
இரா.முத்தரசன் எழுதிய ‘மண்மாற்றம்’ மற்றும் ‘செல்லியல் பார்வைகள்’ இரு நூல்களும் அனைத்து வாசகர்களும் படித்து மகிழும் வண்ணம் இலவசமாகவே, இணையத்தில் மின்னூல்களாக வழங்கப்பட்டிருக்கின்றன. இந்நூல்களை கீழ்க்காணும் இணையத் தளத்தில் வாசகர்கள் இலவசமாகவே பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.