மும்பை – எகிப்தின் அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த 500 கிலோ உடல் எடை கொண்ட பெண்மணி இமான் அகமட்.
இவர் தனது உடல் எடையைக் குறைக்க, இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த உடல் எடைக் குறைப்பு நிபுணர் முபாசல் லக்டாவாலாவிடம் சிகிச்சைப் பெற ஆலோசனை கேட்டார்.
முபாசல் அளித்த ஆலோசனையின் படி, அவர் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி, மும்பைக்கு அழைத்து வரப்பட்டு, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார்.அவருக்கு 13 பேர் கொண்ட மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வந்தது.
இந்நிலையில், இமானின் சகோதரி சைமா சலீம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தனது சகோதரியின் உடல்நிலையில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, இமானுக்கு அபுதாபியில் சிகிச்சை தொடர அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். அதன் படி, இன்று வியாழக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு மும்பையில் இருந்து சரக்கு விமானம் மூலம் இமான், அபுதாபி அழைத்துச் செல்லப்படுகின்றார்.
இதனிடையே, இமான் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனை நிர்வாகம், அவரது சிகிச்சை விவரங்கள் அடங்கிய 29 பக்க அறிக்கையை சகோதரி சைமா சலீமிடம் அளித்திருக்கிறது.
ஆனால், அவற்றில் பெரும்பாலான வற்றில் சைமா சலீம் கையெழுத்திட மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
இமானின் சிகிச்சைக்காக இதுவரை அம்மருத்துவமனைக்கு 2 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக சைமா சலீம் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, இமான் 500 கிலோவிலிருந்து 170 கிலோவாகக் குறைக்கப்பட்டுவிட்டது என மருத்துவர் முபாசல் கூறியதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டிருக்கிறது.