புத்ரா ஜெயா – “கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி பிரதமரால் அறிவிக்கப்பட்ட இந்திய சமுதாயத்திற்கான வியூக செயல் திட்டத்தைத் தொடர்ந்து, தற்பொழுது பிரதமர் துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய சீட் (SEED), செடிக் (SEDIC), எஸ்ஐடிஎப் (SITF), தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக் குழு போன்ற சிறப்புக் குழுக்களில் இருக்கக்கூடிய எல்லா அதிகாரிகளையும் ஒன்றாக இணைத்து அடுத்தக்கட்ட வேலைகளுக்கான செயல் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளோம். முதல்கட்டமாக, முறையான ஆவணங்களின்றி பிரச்சனைகள் எதிர்நோக்கக் கூடியவர்களின் நிலையை மீண்டும் ஆராய்வதற்காக முன்பு மை டப்தார் (My Daftar) எனப்படும் நடைமுறையின் வழி செய்தது போல், வரக்கூடிய ஜூன் மாதம் நாடு தழுவிய அளவில் 23 இடங்களில் ஆவணப் பதிவு செய்யக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது விடுத்த அறிக்கையில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் சுப்ரா…
குறிப்பாக, பேராக் மாநிலத்தில் 4 இடங்கள், சிலாங்கூர் மாநிலத்தில் 5 இடங்கள் எனப் பல்வேறு இடங்களில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் அடிப்படையில், அந்தந்த வட்டாரத்தைச் சார்ந்தவர்கள் ஆவணப் பிரச்சனைகளை எதிர்நோக்கினார்கள் என்றால் இதன் வழி விண்ணப்பம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றும் டாக்டர் சுப்ரா பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.
“இதற்கு முன்னதாக மை டப்தார் (My Daftar) வழி மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் அடிப்படையில் ஆவணப் பதிவுக்கு விண்ணப்பம் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,726 ஆகும். அவர்களில் ஏறக்குறைய 7,126 பேரின் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 4,390 பேருக்குக் குடியுரிமை, 1,974 பேருக்குப் பிறப்புப் பத்திரம், 790 பேருக்கு அடையாள அட்டை ஆவணங்கள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. மேலும், சுமார் 4,974 விண்னப்பங்கள் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் உள்துறை அமைச்சின் கீழும் பதிவிலாகாவின் கீழும் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை மையமாக வைத்துப் பலர் பலவிதமான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இன்னும் 2 முதல் 3 இலட்சம் வரையிலானவர்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லையென்று கருத்துப் பதிவும் செய்து வருகின்றனர். இது போன்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அடிப்படையில் இது போன்ற நேரடியான செயல்திட்டங்கள் கைக்கொடுக்கும் என நான் பெரிதும் நம்புகின்றேன்” என்றும் டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
“இது போன்ற கருத்துப் பதிவுகள் உண்மையென்றால், சம்பந்தப்பட்டவர்கள் தானாகவே வந்து பதிந்து கொள்வர். நாங்களும் எது உண்மை என்று தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். ஆகவே, இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு ஆவணப் பிரச்சனைகளை எதிர்நோக்குபவர்கள் முன்வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்று தனது அறிக்கையில் கேட்டுக் கொண்ட சுப்ரா “குறிப்பாக, மலேசியாவில் பிறந்து ஆவணங்கள் இல்லாமல் இருக்கக்கூடியவர்களுக்கு எதன் அடிப்படையில் ஆவணங்கள் கிடைக்காமல் இருக்கின்றது என்பதை ஆராயக்கூடிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. அந்த பொறுப்பின் அடிப்படையில், நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆவணப் பிரச்சனைகளைத் தொடர்ந்து, வியூகச் செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றப் பிரச்சனைகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாகத் தீர்வு காணப்படும்” என்றும் உறுதியளித்தார்.