Home Featured நாடு ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக உருவெடுக்கின்றது!

ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக உருவெடுக்கின்றது!

1175
0
SHARE
Ad

Hindraf

கோலாலம்பூர் – “மலேசிய இந்திய சமுதாயத்தின் போர் வாளாகவும் உரிமைக் குரலாகவும் மலேசிய அரசியல் வானில் புதிய சிந்தனையை விதைத்த விடிவெள்ளியாகவும் விளங்குகின்ற ஹிண்ட்ராப் இயக்கம் அரசியல் கட்சியாக புதிய பரிமாணத்தை எட்டுகிறது” என்று அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் முனியாண்டி பொன்னுசாமி அறிவித்துள்ளார்.

இதன் தொடர்பில், கடந்த மே 7-ஆம் தேதி நடைபெற்ற ஹிண்ட்ராப் இயக்கத்தின் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது என்றும் அதில், இது குறித்து ஆழமான, ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றம் இடம் பெற்ற பின், ஹிண்ட்ராப் இயக்கம் ஓர் அரசியல் இயக்கமாக புதுப்பாதை வகுத்து, புதுப்பாங்குடன் செயல்பட ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் முனியாண்டி பொன்னுசாமி மேலும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஹிண்ட்ராப் இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் அவரது அறிக்கை இடம் பெற்றிருக்கின்றது.

“இந்த இயக்கம், உண்மையிலேயே நலிந்த இந்திய மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, ஊது குழல் கட்சிகளைப் போல இல்லாமல், ஓர் அரசியல் கட்சியைப் போலவே, கடந்த 2005 முதல் செயல்படுகின்ற நிலையில், ஹிண்ட்ராப் சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைத்து, 1960 இயக்கங்கள் சட்ட சரத்துகள் குறித்து, குறிப்பாக சட்டப் பிரிவு 11(3) (பி) பற்றி விரிவாக ஆலோசித்து, ஹிண்ட்ராப் இயக்க சட்ட திட்டங்கள், அரசியல் கட்சிக்குரிய தன்மையுடன் இருப்பதால், ஹிண்ட்ராப் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவதில் நடைமுறைச் சிக்கல் இல்லை என்று அறிவித்தனர்” என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

“2008-இல் கடந்த பன்னிரண்டாவது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணியின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை உடைத்ததுடன், மலேசிய அரசியலிலும் தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது ஹிண்ட்ராப் இயக்கம். இப்படிப்பட்ட நிலையில், இதுவரை சமூக இயக்கமாக செயல்பட்ட ஹிண்ட்ராப், அரசியல் கட்சியாக மாறி, வருகின்ற பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் என்ற நம்பிக்கைக் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவிக்கும்” என்றும் அந்த அறிக்கையில் பொ.முனியாண்டி தெரிவித்துள்ளார்.