இஸ்லாமாபாத் – சீனா தற்போது பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் வழியாக ‘சில்க் ரோட்’ எனப்படும் ‘பட்டு பயணப் பாதையை’ மீண்டும் நிர்மாணிக்கும் பிரம்மாண்டமான திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.
பழங்காலத்தில் சீனாவின் வணிகம் சில்க் ரோட் எனப்படும் பட்டுப் பயணப் பாதை வழியாக மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் இதே போன்றதொரு பயணப் பாதையை உருவாக்கி அதை மையமாகக் கொண்ட பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகின்றது.
இதற்காக நடத்தப்படும் ‘பெல்ட் அண்ட் ரோட்’ மாநாட்டில் கலந்து கொள்ளத்தான் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் தற்போது சீனா சென்றிருக்கின்றார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை கட்டுமானப் பகுதிகளில் பணிபுரிந்து வந்த 10 பாகிஸ்தானியர்கள் இன்று சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். தாக்குதல் நடந்த குவாடர் பகுதியை மேலே உள்ள வரைபடம் குறியிட்டுக் காட்டுகிறது.
குவாடர் நகர் துறைமுக நகராகத் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது என்பதோடு, சீனாவின் புதிய பட்டு பயணப் பாதையில் அரேபியக் கடலோடு இணைக்கும் நகராகவும் குவாடர் திகழ்கிறது.