(நேற்று செவ்வாய்க்கிழமை மே 23-ஆம் தேதி காலமான ஹாலிவுட் நடிகர் ரோஜர் மூர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றார் செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
உலகம் முழுவதும் உள்ள திரைப்பட இரசிகர்களால் – அவர்கள் எந்தப் பின்னணியைக் கொண்டவர்களாக இருந்தாலும் – மறக்க முடியாத கதாபாத்திரம் பிரிட்டனின் உளவாளி ஜேம்ஸ்பாண்ட் 007.
இதுவரையில் 26 ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு, 7 நடிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அனைத்தும் ஐயன் பிளமிங் என்ற நாவலாசிரியர் எழுதிய நாவல்களை அடிப்படையாகக் கொண்டு, அவரது நாவலின் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட படங்கள்.
ஷான் கானரி முதன் முதலாக ஜேம்ஸ்பாண்டாக நடித்த ‘டாக்டர் நோ’
அந்தக் கதாபாத்திரத்தை முதன் முதலாகச் செதுக்கி, உண்மையிலேயே ஜேம்ஸ்பாண்ட் என்றால் இப்படித்தான் இருப்பார் என திரையில் இரசிகர்கள் நம்பும்படி உலவ விட்டவர் ஷான் கானரி, 1962-இல் வெளிவந்த ‘டாக்டர் நோ’ படத்தின் மூலம்!
கானரி பிரிட்டிஷ் நடிகர் என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்! அப்போது முதல் ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு பிரிட்டிஷ் கதாநாயக நடிகர்களே பரிசீலிக்கப்பட்டார்கள். பிரிட்டிஷ் உளவாளி என்பதால், அமெரிக்க ஆங்கிலம் பேசாமல் பிரிட்டிஷ் ஆங்கிலம் பேச வேண்டியதால் இந்த ஏற்பாடு!
ஆனால் ஆறு படங்களில் நடித்து முடித்தவுடன் இனிமேல் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என ஒதுங்கிக் கொண்டார் ஷான் கானரி. அணு அணுவாக அவர் செதுக்கிய பிரம்மாண்டமான கதாபாத்திரத்தில் அவருடைய இடத்தை நிரப்பக் கூடியவர் அடுத்து யார் என ஒட்டு மொத்த ஹாலிவுட்டே கண் கொட்டாமல் காத்திருந்தது.
ரோஜர் மூர் முதன் முதலாக ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்த ‘லிவ் அண்ட் லெட் டை’
அப்போது 1967-இல் வெளிவந்த ‘கேசினோ ரோயல்’ என்ற படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் டேவிட் நிவன் (David Niven) என்ற நடிகர் நடித்தார். இவரும் பிரிட்டன் நாட்டின் நடிகர்தான். ஆனால் அந்தப் படம் எடுபடவில்லை என்பதோடு, இன்றுவரை அந்தப் படம் ஜேம்ஸ்பாண்ட் படவரிசையிலும் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.
எனவே, ஒரே படத்தோடு டேவிட் நிவன் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்திலிருந்து கழட்டி விடப்பட்டார்.
முதுமையான தோற்றத்தில் ரோஜர் மூரின் அண்மையத் தோற்றம்…
அடுத்து வந்தார் ஜோர்ஜ் லாசன்பி (George Lazenby). இவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த நடிகர். ‘ஒன் ஹெர் மெஜஸ்டிஸ் சிக்ரெட் செர்விஸ்’ (On Her Majesty’s Secret Service) என்ற படத்தில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தார். 1969-இல் வெளிவந்தது இந்தப் படம். ஆனால் இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஒரே படத்தோடு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திலிருந்து கழட்டி விடப்பட்டார் ஜோர்ஜ் லாசன்பி.
எனவே, மற்றொரு புதிய நடிகர் ஜேம்ஸ்பாண்டாக உலா வரவேண்டும் என திரைப்பட இரசிகர்களும், படத் தயாரிப்பாளர்களும் ஒருங்கே தேட ஆரம்பித்தபோது கிடைத்தவர்தான் ரோஜர் மூர்.
மீண்டும் வெற்றிகரமான ஜேம்ஸ்பாண்ட்டாக ரோஜர் மூர்
1962-க்கும் 1969-க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த ‘தி செயிண்ட்’ (The Saint) என்ற தொலைக்காட்சித் தொடரில் சைமன் டெம்ப்ளர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இரசிகர்களிடையே நல்ல அறிமுகம் பெற்றிருந்தார் ரோஜர் மூர்.
இருப்பினும், ஜேம்ஸ்பாண்டாக அவர் வெற்றி பெறுவாரா-ஏற்றுக் கொள்ளப்படுவாரா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. காரணம் ஷான் கானரியை விட மூன்று வயது மூத்தவர் ரோஜர் மூர். அதைவிட முக்கியமாக ஷான் கானரிக்கு இருந்தது போல் கட்டுமஸ்தான உடற்கட்டு ரோஜர் மூருக்கு இல்லை. விறைப்பான தோற்றமும் இல்லை.
இருப்பினும் பல நடிகர்களைப் பரிசீலித்த பின்னர், 1972-இல் புதிய ஜேம்ஸ்பாண்டாக அறிமுகப்படுத்தப்பட்ட ரோஜர் மூர், முதன் முதலாக அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த ‘லிவ் அண்ட் லெட் டை’ (Live and Let Die) படம் அமோக வெற்றி பெற்றது.
ஷான் கானரி அதுவரை வடிவமைத்து 6 படங்களில் உலவவிட்டிருந்த ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தை தனக்கே உரிய நடிப்பாலும், தோற்றத்தாலும், சிறு சிறு முகபாவங்களாலும், ஒரேயடியாக ஒரே படத்திலேயே மாற்றியைத்து வெற்றிக் கொடி நாட்டினார் ரோஜர் மூர்.
கிண்டலாக பார்த்துக் கொண்டே, அவர் விடுத்த புன்சிரிப்பும், நகைச்சுவை தொனிக்கப் பேசிய வசனங்களும், இரசிகர்களைக் கவர்ந்தன.
காதல் காட்சிகளிலும் ஜேம்ஸ்பாண்ட்டாக பின்னியவர் ரோஜர் மூர்…
ஜேம்ஸ்பாண்டின் காதல்களும், காதலிகளும்கூட இரசிகர்களிடையே எப்போதும் பிரசித்தம். படத்தில் காதல் காட்சிகளில் ரோஜர் மூர் காட்டிய நளினமும், காதல் சொட்டும் பார்வைகளும், கட்டியணைப்புகளும் கூட அவர் அந்தக் கதாபாத்திரத்தில் வெற்றி பெற மற்ற சில காரணங்கள்!
ஷான் கானரி வடிவமைத்த இரும்பு மனிதர் போன்ற தோற்றத்தை ஒரேயடியாக மாற்றி நகைச்சுவையும் அதே வேளையில் சண்டைக்காட்சிகள் என்று வரும்போது ஆக்ரோஷத்தையும் காட்டும் கதாபாத்திரமாக ஜேம்ஸ்பாண்ட் ரோஜர் மூரால் உருவகப்படுத்தப்பட்டார்.
பரபரப்பான சண்டைக்காட்சிகளுக்கிடையே கிண்டலோடும், தனக்கே உரித்தான புன்சிரிப்போடும் ரோஜர் பேசிய வசனங்களும், அவரது உடல்மொழியும் இரசிகர்களின் பலத்த கரகோஷத்தைப் பெற்றன.
விளைவு?
அடுத்தடுத்து ஏழு படங்களில் ஷான் கானரிக்கு இணையாக ஜேம்ஸ்பாண்டாக நடித்தார் ரோஜர் மூர். அத்தனையும் வசூல் சாதனை புரிந்த வெற்றிப் படங்கள்.
1985 வரை சுமார் 13 ஆண்டுகள் ஜேம்ஸ்பாண்டாக ஹாலிவுட்டில் உலா வந்தார் ரோஜர் மூர். இதுவரையில் நீண்ட காலம் ஜேம்ஸ்பாண்டாக நடித்த நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதற்கிடையில் ரோஜர் மூர் ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, ‘நெவர் சே நெவர் எகெய்ன்’ (Never say never again) என்ற படத்தில் மீண்டும் ஒருமுறை ஜேம்ஸ்பாண்டாக ஏழாவது முறையாக அந்தக் கதாபாத்திரத்தில் 1983-ஆம் ஆண்டில் நடித்தார் ஷான் கானரி. வேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட அந்தப் படமும் வெற்றி பெற்றது.
இருப்பினும், ஷான் கானரி (படம்) மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்குத் திரும்பவில்லை. ரோஜர் மூர்தான் தொடர்ந்தார்.
ரோஜர் மூர் கடைசியாக ஜேம்ஸ்பாண்டாக நடித்த ‘எ வியூ டு கில்’
தொடர்ந்து 1985-இல் வெளிவந்த ‘எ வியூ டு கில்’ (A View to Kill) என்ற திரைப்படத்தோடு, ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்திற்கு விடைகொடுத்துவிட்டு மற்ற வகைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் ரோஜர் மூர்.
அவருக்குப் பின்னர் திமோதி டல்டன், பியர்ஸ் பிரோஸ்னான், போன்ற நடிகர்கள் ஓரிரு படங்களில் ஜேம்ஸ்பாண்ட்டாக நடித்தனர்.
தற்போது டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட்டாக இரண்டு படங்களில் நடித்துவிட்டு, மூன்றாவது படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
எலிசபெத் இராணி வழங்கிய ‘சர்’ பட்டம்
2003-ஆம் ஆண்டில் ரோஜர் மூருக்கு ‘சர்’ பட்டம் வழங்கி கௌரவித்தார் எலிசபெத் மகாராணியார். பிரான்ஸ் போன்ற மற்ற நாடுகளும் அவருக்கு விருதுகள் வழங்கியிருக்கின்றன. அமெரிக்காவின் ஹாலிவுட் படவுலகமும் அவரை கௌரவப்படுத்தியிருக்கின்றது.
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வந்துவிட்ட பிறகு மற்ற கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றாலும் இன்றுவரை தொடர்வது ஜேம்ஸ்பாண்டாக நடித்தவர்களில் சிறந்தவர் ஷான் கானரியா? ரோஜர் மூரா? என்ற விவாதம்தான்!
சில ஆய்வுகளில் ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்தவர்களில் இன்றுவரையில் ரோஜர் மூர்தான் சிறந்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர் என்ற முடிவுகளும் வெளியிடப்பட்டன.
அந்த வகையில் மண்ணில் இருந்து மறைந்துவிட்டாலும், ஆங்கிலப் பட இரசிகர்களின் மனங்களில் நீண்ட காலத்திற்கு நிலையான இடத்தைப் பிடித்து நிலைத்து நிற்பார் ரோஜர் மூர்!
-இரா.முத்தரசன்