ஹனோய் – தெற்கு பிலிப்பைன்சின் மிண்டானாவ் மாகாணத்திலுள்ள மாராவி நகரில், பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையினருக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில், சுமார் 2,000 பிலிப்பினோ மக்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இருதரப்பினருக்கிடையில் சண்டை நடக்கத் தொடங்கியவுடன் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே, மிண்டானாவில் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
எனினும், அது இருதரப்பினரிடையே நடைபெற்று வரும் சண்டையை நிறுத்தவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்களின் நிலை குறித்து உள்ளூர் அதிகாரிகள் அபாய எச்சரிக்கை எழுப்பியிருக்கின்றனர்.
தீவிரவாதிகள் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளில் சிக்கியிருக்கும் பொதுமக்களை மீட்க இயலவில்லை என பிலிப்பைன்ஸ் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே, 19 பொதுமக்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருக்கின்றனர். அதில் இரண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். இச்சண்டையில் தீவிரவாதிகள் தரப்பில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த மே 23-ம் தேதி, அபு சயாஃப் இயக்கத்தின் கமாண்டரும், பிலிப்பைன்சில் உள்ள ஐஎஸ் அமைப்பு என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இயக்கத்தின் தலைவனுமான இஸ்னிலான் ஹாபிலான் பதுங்கியிருப்பதாகச் சந்தேகப்படும் வீட்டில் அதிரடியாக நுழைந்த பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையினர் அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது, தான் அப்பகுதியில் இருதரப்பினரிடையே வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.