Home Featured நாடு “கேமரன் மலை மஇகாவுக்கே! பிரதமரிடமும் தெரிவித்தாகி விட்டது” – டாக்டர் சுப்ரா

“கேமரன் மலை மஇகாவுக்கே! பிரதமரிடமும் தெரிவித்தாகி விட்டது” – டாக்டர் சுப்ரா

1268
0
SHARE
Ad

subra-blue print brief-04052017

கோலாலம்பூர் – கேமரன் மலை நாடாளுமன்றம் குறித்தும் அந்தத் தொகுதியில் தனது மைபிபிபி கட்சி சார்பாக நானே போட்டியிடுவேன் எனவும் மீண்டும் மீண்டும் கூறிவரும் டான்ஸ்ரீ கேவியசுக்கு பதிலடியாக நேற்று விடுத்திருக்கும் ஓர் அறிக்கையில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், “கேமரன் மலை மஇகாவின் தொகுதிதான் அதில் எந்த மாற்றமுமில்லை. அங்கு மஇகா வேட்பாளர்தான் நிறுத்தப்படுவார். இதைப் பிரதமரிடமும் தெரிவித்து விட்டோம்” என உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

ஆகக் கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (28 மே 2017) நடைபெற்ற மைபிபிபி கட்சியின் புக்கிட் பிந்தாங் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது கேமரன் மலையில் நானே போட்டியிடுவேன் என்றும், அந்தத் தொகுதியில் வென்று மீண்டும் அமைச்சராக அமர்வேன் என்றும் கேவியஸ் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

“மஇகா விட்டுக் கொடுக்காது”

subra-mic-camerons (17)

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி கேமரன் மலைக்கு வருகை தந்த டாக்டர் சுப்ரா அங்கு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது…

“தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளுக்கிடையே காணப்பட்ட உடன்பாட்டின்படி 2004-ஆம் ஆண்டு முதல் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டு, கடந்த 3 பொதுத் தேர்தல்களிலும் மஇகா அந்தத் தொகுதியை வென்று வந்துள்ளது. 2008-ஆம் ஆண்டில் நாடெங்கும் அரசியல் சுனாமி வீசிய காலகட்டத்திலும், கேமரன் மலைத் தொகுதியை வெற்றி பெற்றுத் தக்க வைத்துக் கொண்ட வரலாறு கொண்டது மஇகா. இந்நிலையில், அந்தத் தொகுதியை யாருக்கும் விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. மீண்டும் அங்கு மஇகா வேட்பாளர்தான் போட்டியிடுவார். வெல்வார் – அதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இது குறித்து தேசிய முன்னணி தலைமைத்துவத்திடமும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களிடமும் தெளிவாகவும், உறுதியாகவும் தெரிவித்து விட்டோம்” என டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

“தொடர்ந்து கேமரன் மலை தொகுதியில் எல்லாவித சேவைகளையும், மக்கள் சந்திப்பு நடவடிக்கைகளையும் மஇகாவும் தேசியத் தலைவர் என்ற முறையில் நானும் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கிறோம். குறிப்பாக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி கேமரன் மலைக்கு இரண்டு நாள் வருகை மேற்கொண்ட நான் அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, பல மக்கள் சேவைத் திட்டங்களையும் நேரடியாகக் கவனித்துத் தொடக்கி வைத்தேன். அனைத்து மஇகா கிளைத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், இந்தியர் இயக்கங்களின் தலைவர்கள், தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், தேசிய முன்னணி கூட்டணி கட்சியினர், பூர்வகுடி மக்கள் என அனைத்துத் தரப்பினரோடும் சந்திப்புகள் நடத்தி கேமரன் மலையில் தொடர்ந்து மஇகாவின் சேவைகள் தொடர்வதை நாங்கள் உறுதி செய்திருக்கின்றோம்” என்றும் டாக்டர் சுப்ரா கூறியிருக்கிறார்.

“எங்களின் பணிகள் கேமரன் மலையில் தொடரும் என்பதோடு, அடுத்த பொதுத் தேர்தலில் கேமரன் மலையை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும், வியூகங்களையும், மஇகா வகுத்து வருகின்றது” என்றும் டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.