சென்னை – டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தற்போது 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை திரட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் தினகரன் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகின்றது.
முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்திருந்த அதிமுக, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதும், எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என மாறியது.
இந்நிலையில், இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் தினகரன் சிறைக்குச் செல்லவே, அவரை கட்சியிலிருந்து விலகச் சொல்லியது பழனிச்சாமி அணி. அவரும் தான் கட்சியிலிருந்து விலகுவதாக் அறிவித்தார்.
இதனிடையே, அவ்வழக்கில் தற்போது பிணையில் விடுதலையாகி வந்திருக்கும் தினகரன், நேற்று பெங்களூர் சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், இரு அணிகளும் 60 நாட்களுக்குள் இணையவில்லை என்றால், தான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக கெடு விதித்தார்.
தினகரனுக்கு தற்போது 20 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
இதனையடுத்து, தற்போது அதிமுக தினகரன் அணி, பழனிச்சாமி அணி, பன்னீர் செல்வம் அணி என மூன்றாகப் பிரிந்திருக்கிறது.