கோலாலம்பூர் – பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லாத பட்சத்தில் மீண்டும் தான் பிரதமர் பதவியேற்கப் போவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
‘நிக்கெய் ஆசியான் ரிவியூ’ என்ற ஜப்பான் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் செய்தியில், அடுத்த பொதுத்தேர்தலில் எதிர்கட்சி வெற்றி பெற்றால், தான் மீண்டும் பிரதமர் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக பெர்சாத்து கட்சியின் தலைவருமான மகாதீர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது.
“வேட்பாளர் யாரும் இல்லை என்றால், எல்லோரும் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் நான் முயற்சி செய்வேன்” என்று மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
பல பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்ற அனுபவம் இருப்பதால் மட்டுமே தான் இந்த முடிவு எடுப்பதாகவும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், தான் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், தன்னுடைய அதிகாரத்தை எந்த நேரத்திலும் துஷ்பிரயோகம் செய்ததில்லை என்று கூறியிருக்கும் மகாதீர், அதனால் மட்டுமே தான் 5 முறை தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.