கோலாலம்பூர் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் 14வது பொதுத் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் தொடங்கி, மே 2018-க்குள் நடைபெறும் என ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் ஆரூடம் கூறியுள்ளார்.
எதிர்வரும் அக்டோபரில் சீன அதிபர் சீ ஜின் பிங் மலேசியாவுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொள்வதால் அதற்கு முன்பாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என்றும் அதே சமயம் எதிர்வரும் ஜூன் 2018-இல் சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு முன்பாகவே பொதுத் தேர்தலை தேசிய முன்னணி நடத்தி விடும் என்றும் லிம் கிட் சியாங் கணித்துள்ளார்.
“அன்வாருக்கு மாமன்னரிடம் இருந்து மன்னிப்பு கிடைத்து அதன் மூலம் முழுவிடுதலை கிடைத்து அவரால் மீண்டும் போட்டியிட முடியுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. அதே போல, அன்வார் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும், பொதுத் தேர்தல் சமயத்தில் அவர் சிறையை விட்டு விடுதலையாகி வெளியே இருந்தால், அவர் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் தேசிய முன்னணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகின்றது. அடுத்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நோன்பு மாதம் தொடங்கி விடும் என்பதாலும், அதற்கு முன்பாகவே, பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு விடும்” என லிம் கிட் சியாங் எதிர்பார்க்கிறார்.
இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.
நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் எதிர்வரும் ஜூன் 25-ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அதற்குப் பின்னர் அடுத்த 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பொதுத் தேர்தலில் ஜசெக சார்ந்திருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி மீண்டும் வெற்றியடைவது மக்களின் கைகளில்தான் இருக்கிறது என்றும் அவ்வாறு பக்காத்தான் ஹரப்பான் வெற்றியடைந்தால் மலேசியாவின் ஜனநாயகம் மீண்டும் நிலைநிறுத்தப்படும் என்றும், அனைத்துலக அரங்கில் தற்போது மலேசியாவுக்கும் இருக்கும் “ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல்” என்பது போன்ற தோற்றம் முற்றாகத் துடைத்தொழிக்கப்படும் என்றும் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.