ஜோர்ஜ் டவுன் – செபராங் பிறை போலிடெக்னிக்கில் இந்திய உணவு விநியோகிப்பாளர் ஒருவரின் குத்தகை, இன அடிப்படையில் இரத்து செய்யப்பட்டது எனக் கூறப்படும் புகார்கள் தொடர்பில் இன்று வியாழக்கிழமை (29 ஜூன்) பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி நடத்துகிறார்.
இன்று நண்பகல் 12.00 மணிக்கு பினாங்கு கொம்தார் கட்டிடத்தின் 52-வது மாடியில் இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்படும்.
இந்திய உணவு விநியோகிப்பாளரின் குத்தகை இரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை இராமசாமி இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்குவார் என அவரது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
சம்பந்தப்பட்ட அந்த குத்தகையாளரின் குத்தகை இரத்து இன ரீதியான ஒன்று அல்ல என்றும் அவர் குத்தகை தொடர்பிலான நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறியதால்தான் அவரது குத்தகை இரத்து செய்யப்பட்டிருந்தது என்றும், இதே போன்று மேலும் 3 மலாய்க்கார குத்தகையாளர்களின் குத்தகைகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன என்றும் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் அறிக்கை ஒன்றில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இராமசாமியின் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் புதிய தகவல்கள் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.