Home Featured கலையுலகம் பிக் பாஸ்: ஜூலியானா, வையாபுரி, அழுதது ஏன்?

பிக் பாஸ்: ஜூலியானா, வையாபுரி, அழுதது ஏன்?

1074
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்திலும், மலேசியாவிலும் அனைவராலும் பார்க்கப்படும், பேசப்படும், சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட ஓரிரண்டு நாட்களிலேயே உருவெடுத்துள்ளது ‘பிக் பாஸ்’.

கமலஹாசன் என்ற பிரம்மாண்டம் தொடங்கி வைத்தாலும், கடந்த சில நாட்களில் கமல் மறக்கப்பட்டு விட்டார். நிகழ்ச்சியில் பங்கு பெறும் 15 பிரபலங்களுக்குள் நடைபெறும் விவாதங்கள், கசமுசாக்கள், சச்சரவுகள் ஆகியவற்றினால் தொலைக்காட்சி இரசிகர்கள் அடுத்தது என்ன என நாள்தோறும் காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.

#TamilSchoolmychoice

இடைப்பட்ட காலத்தில் டுவிட்டர் போன்ற சமூக ஊடகத் தளங்களில் ஏராளமான சுவாரசியமான பகிர்வுகள் கொட்டப்படுகின்றன.

இவை போதாதென்று, பரபரப்பான, சுவாரசியமான தருணங்களை விஜய் தொலைக்காட்சியும் நிகழ்ச்சிக்கான விளம்பரங்களாக ஒளிபரப்பி வருகின்றது.

அழுகைக்கும் விஜய் தொலைக்காட்சி அலைவரிசைக்கும் அப்படி ஒரு பொருத்தம்! யாராக இருந்தாலும், ஏதாவது சொல்லி அழவைத்து அதை நெருக்கத்தில் (குளோஸ் அப்) காட்டுவதுதான் அந்த அலைவரிசையின் சிறப்பு.

அதன்படி ஜல்லிக் கட்டு புகழ் ஜூலியானா ஏன் அழுதார் என்பதற்கு விடை கிடைத்து விட்டது. ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, ஜூலியானாவும் தனது தந்தையைப் பற்றி உருக்கமாகவும், கண்ணீருடனும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென குறுக்கிட்ட சக்தி வாசு, “இதை உணர்ச்சிகரமான மேடையாகப் பயன்படுத்தாதீர்கள், சீக்கிரம் சொல்லி முடிங்க” என இடைமறிக்க, அப்போது முதல் நிகழ்ச்சியில் ஜூலியானா அழுத முகமாக உலா வந்து கொண்டிருக்கிறார்.

“எங்கே நான் இந்தப் போட்டி நிகழ்ச்சியில் வென்று விடுவேனோ என எல்லாரும் பயப்படுகிறார்கள். எல்லோரும் சினிமா பிரபலங்கள். நானோ சாதாரண பெண். சினிமா பிரபலங்கள் அவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது யாரும் நிறுத்தவில்லை. என்னை மட்டும் சக்தி வாசு ஏன் நிறுத்தினார்?” என்றும் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார் ஜூலியானா!

இதற்கிடையில் நேற்று தமிழகத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் வையாபுரி ஓவென அழுது புலம்பியது ஏன் என்பதற்கு விடை கிடைத்துவிட்டது. மனைவியையும், பிள்ளையையும் பார்க்காமல்தான் அவர் அவ்வாறு அழுதிருக்கிறார். மனைவி, பிள்ளைகளின் அருமை இப்போதுதான் அவருக்குப் புரிந்திருக்கிறதாம், திருமணமாகி சுமார் 16 வருடங்கள் கழித்து!

அந்தக் காட்சிகளை இன்று வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு அஸ்ட்ரோ 224 ஸ்டார் விஜய் அலைவரிசையில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் மலேசிய இரசிகர்கள் பார்க்கலாம்.

அடுத்தவன் வீட்டில் நடப்பதை சாவித் துவாரம் வழியே பார்ப்பதுதான் இந்த நிகழ்ச்சி. ஆனால் நாகரிகமாக, நவீன யுகத்திற்கேற்ப, சுற்றிலும் கேமராக்கள் என்று நியாயப்படுத்திக் கொண்டு, இருந்தாலும் பல சுவாரசியமான அம்சங்களோடு தொலைக்காட்சி இரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது ‘பிக் பாஸ்’!

-செல்லியல் தொகுப்பு