Home கலை உலகம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலேசிய நடிகை மூன்நிலா பங்கேற்பா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலேசிய நடிகை மூன்நிலா பங்கேற்பா?

302
0
SHARE
Ad
மூன் நிலா

கோலாலம்பூர் : தமிழ்நாட்டின் விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி அகில உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை கமல்ஹாசன் கடந்த 7 ஆண்டுகளாக நடத்திவந்தார். இந்த ஆண்டு அவர் அந்த நிகழ்ச்சியை நடத்தப் போவதில்லை என அறிவித்து விட்டார்.

அதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக நிகழ்ச்சியை நடத்தப் போவது யார் என்ற ஆரூடங்கள் முடிவுக்கு வந்து நடிகர் விஜய் சேதுபதிதான் அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் என விஜய் தொலைக்காட்சி அறிவித்து விட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் பிரபலங்கள் யார் என்ற ஆரூடங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்த முறை மலேசியா சார்பில் நடிகை மூன்நிலா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது வெளிநாடுகளின் கலையுலகத் தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ்-3 தொடரில் மலேசியாவைப் பிரதிநிதித்துப் பங்கேற்ற முகேன் ராவ் இறுதியில் அந்தத் தொடரின் வெற்றியாளராக வாகை சூடினார். அதற்குப் பின்னர் அவர் தமிழ் நாட்டில் தமிழ்ப் படங்களில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளிவந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் அவர் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதிக்கவில்லை.

அடுத்து பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் மலேசியாவின் நடியா சாங் என்ற பெண்மணி பங்கேற்றார். ஆனால், அவர் இறுதி வரை அந்தத் தொடரில் தாக்குப் பிடிக்கவில்லை.

இந்நிலையில் மலேசியாவில் பல தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை மூன்நிலா பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அண்மையில் சென்னைக்கு செல்வதாக அவர் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து தனது புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் செல்கிறார் என்ற ஆரூடங்கள் அதிகரித்துள்ளன.