கோலாலம்பூர்: மெர்டேக்கா சென்டர் என்னும் ஆய்வு நிறுவனம் தேசிய அளவில் இளைஞர்களிடையே நடத்திய ஆய்வில், இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக நம்புகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, இணக்கம் ஆகியவை தொடர்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி 62 விழுக்காட்டு இந்தியர்கள் தாங்கள் இந்த நாட்டில் ஏதோ ஒரு விதத்தில் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். 28 விழுக்காட்டு இந்தியர்கள் மட்டுமே தாங்கள் நியாயமாக நடத்தப்படுவதாகத் தெரிவித்தனர். இதனை மெர்டேக்கா சென்டரின் இணை தோற்றுநரும் இயக்குநருமான இப்ராஹிம் சுஃபியான் தெரிவித்தார்.
இந்தியர்களுடன் ஒப்பிடும்போது சீன சமூகத்தினரில் 57 விழுக்காட்டினர் தாங்கள் முறையாக நடத்தப்படவில்லை என தெரிவித்தனர். 40 விழுக்காட்டினர் மட்டுமே தாங்கள் நியாயமாக, சரிசமமாகவும் நடத்தப்படுவதாக் கூறினர்.
இந்த ஆய்வின் மற்றொரு கூறாக இந்தியர்கள், சக இந்தியர்கள் என்று வரும்போது 85 விழுக்காட்டினர் மட்டுமே ஒருவரை ஒருவர் நம்புகின்றனர் என்ற விவரமும் தெரிய வந்துள்ளது.
ஆனால் சீனர்களோ, சக சீனர்கள் என்று வரும்போது 95 விழுக்காட்டினர் ஒருவரை ஒருவர் நம்புகின்றனர்.