மாராவி சிட்டி – பிலிப்பைன்ஸ் நாட்டின் மாராவி சிட்டியில் அரசுப் படைகளுக்கும், ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகளுக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக சண்டை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், மாராவி சிட்டி பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் பலர் தீவிரவாதிகளால் பிணை பிடிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை மீட்க பிலிப்பைன்ஸ் படையினர் கடுமையாகப் போராடி வந்தனர்.
இந்நிலையில், அவர்களில் பலரை தீவிரவாதிகள் ஆயுதமேந்த வைத்து, அரசு படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த வைத்திருப்பதாகவும், பலர் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், பொதுமக்களில் பெண்கள் பலர் பாலியல் சேவைக்காக அடிமைகளாக சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் பிலிப்பைன்ஸ் கூறுகின்றது.
இதனிடையே, தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பொதுமக்களில் 5 பேர், தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டிருக்கின்றனர்.
மொத்தம் 17 பொதுமக்கள் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பிலிப்பைன்ஸ் கூறுகின்றது.