அனிஸ் அம்ரி என்ற அந்த துனிசிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதி கொல்லப்பட்டதை இத்தாலிய உள்துறை அமைச்சர் மார்க்கோ மின்னிட்டி உறுதிப் படுத்தியுள்ளார். அம்ரியின் அடையாளம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் மிலான் நகரின் வடக்கு புறநகர் பகுதிகளில் காவல் துறையினர் வழக்கமான சாலைப் போக்குவரத்து சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தபோது அனிஸ் அம்ரியின் வாகனம் இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.00 மணிக்கு பரிசோதனைக்காக தடுத்து நிறுத்தப்பட்டது.
தடுத்து நிறுத்திய காவல் துறை அதிகாரி அம்ரியின் அடையாள ஆவணங்களைக் காட்டுமாறு கூறியபோது, அவன் திடீரென துப்பாக்கியால் காவல் துறை அதிகாரியை நோக்கி சுட்டான்.
காவல் துறையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் அனிஸ் அம்ரி சுட்டுக் கொல்லப்பட்டான்.