Home Featured வணிகம் பெர்ஜயா – நாஸா மோட்டோர்ஸ்: திருமணத்தில் இணையப் போகும் இருபெரும் நிறுவனங்கள்!

பெர்ஜயா – நாஸா மோட்டோர்ஸ்: திருமணத்தில் இணையப் போகும் இருபெரும் நிறுவனங்கள்!

1423
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடு முழுமையிலும் கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், மக்களிடத்திலும் அதிகமாகப் பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது, ஒரு திருமண பந்த அறிவிப்பு!

பெர்ஜயா என்றதும் நம் நினைவுக்கு வருவது வின்சென்ட் டான் என்ற கோடீஸ்வரர். சாதாரண காப்புறுதி (இன்சூரன்ஸ்) முகவராக வாழ்க்கையைத் தொடங்கி, இன்று டோட்டோ, பெர்ஜயா நிறுவனங்கள், பெர்ஜயா டைம்ஸ் ஸ்குவேர் என வரிசையாக அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு விரிவான வணிக சாம்ராஜ்யத்தைக் கொண்டிருப்பவர்.

(கிரிசிஸ் டானிடம் தனது காதலைக் கூறி திருமணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்கும் பாலிக் நசிமுடின் – இன்ஸ்டாகிராம் படம்)

#TamilSchoolmychoice

அவரது மகள் கிரிசிஸ் டான். பெர்ஜயா டைம்ஸ் ஸ்குவேர் வணிக வளாகத்தின் தலைமைச் செயல் அதிகாரி. வின்சென்ட் டானின் மகள் என்ற முறையில் அவரது வணிக வாரிசுகளில் ஒருவராக விளங்குபவர்.

இவரைக் காதலிப்பவர் – அண்மையில் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என காதல் கோரிக்கையை முன்வைத்திருப்பவர் – எஸ்எம் பாலிக் நசிமுடின். வெறுமனே இப்படிச் சொன்னால் யாரென்று கேட்பீர்கள்!

பாலிக் நசிமுடின் – கிரிசிஸ் டான் இணை – ஹரிராயா கொண்டாட்டத்தின்போது…

நாஸா மோட்டோர் என்றால் உடனே உங்களுக்கு அந்த நிறுவனத்தின் பரந்து விரிந்த வாகனத் துறை வணிக சாம்ராஜ்யம் உங்களின் நினைவுக்கு வரும். அமரர் டான்ஸ்ரீ எஸ்எம் நசிமுடின் அமின் சாதாரண கார் விற்பனை முகவராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் மாபெரும் வாகன வணிக சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக்கினார். அவரது மகன்தான் பாலிக்.

பிரபல முஸ்லீம் குடும்பம் ஒன்றும், சீனக் குடும்பம் ஒன்றும் இந்தத் திருமணத்தின் மூலம் இணைகிறது என்பதோடு நாட்டின் இரு பெரும் கோடீஸ்வர செல்வந்தக் குடும்பங்களும் ஒரு திருமணத்தின் மூலம் இணையப் போகின்றன என்பதுதான் இந்தத் திருமணம் நாடு முழுமையிலும் பேசப்படும் விஷயமாக மாறியிருப்பதற்கான காரணம்!

மொரோக்கோவில் சுற்றுலாவில் இணைந்திருக்கும் பாலிக் நசிமுடின் – கிரிசிஸ் டான்…

தற்போது மொரோக்கோவில் சுற்றுலாவில் இணைந்திருக்கும் இந்த ஜோடி தங்களின் திருமணம் குறித்த செய்திகளையும், தாங்கள் ஒன்றாக இணைந்திருக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட, பொதுமக்கள் மத்தியில் தீயாகப் பரவிவிட்டது இந்தத் தகவல்.

இந்தத் திருமணம் நடைபெறும்போது, மலேசியாவின் மிகப் பிரபலமான, பிரம்மாண்டமான திருமணங்களில் ஒன்றாகத் திகழும் என்பது மட்டும் திண்ணம்.

-செல்லியல் தொகுப்பு