ஹாங் காங் – கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிகப் பெரிய அளவிலான யானைத் தந்தக் கடத்தல் சம்பவம் ஒன்றைத் தடுத்திருப்பதாக ஹாங் காங் சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை அறிவித்தனர்.
பிடிபட்டிருக்கும் யானைத் தந்தங்களின் மதிப்பு சுமார் 9 மில்லியன் டாலர் (40 மில்லியன் ரிங்கிட்) இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, ‘பதப்படுத்தப்பட்ட மீன்கள்’ என்ற பெயரில் மலேசியாவில் இருந்து வந்த அந்த சரக்கை சோதனையிட்ட ஹாங் காங் சுங்க இலாகா அதிகாரிகள், அதில் 7,200 கிலோகிராம் (15,900 பவுண்ட்ஸ்) யானைத் தந்தங்கள் இருப்பதைக் கண்டறிந்ததாக ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.
தற்போது இது தொடர்பாக ஹாங் காங்கைச் சேர்ந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த 3 அதிகாரிகளை ஹாங் காங் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
மலேசியாவில் அதனை ஏற்றுமதி செய்த நிறுவனத்தைக் கண்டறியவும் மலேசிய சுங்க இலாகாவுடன் ஹாங் காங் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.