Home Featured நாடு டிஸ்லெக்சியா கற்றல் குறைபாடு கொண்டவர்களுக்கு பயிற்சிகள்

டிஸ்லெக்சியா கற்றல் குறைபாடு கொண்டவர்களுக்கு பயிற்சிகள்

1628
0
SHARE
Ad

Dr Mullai Ramaiahபெட்டாலிங் ஜெயா – மாணவர்களுக்கு நரம்பு மண்டலத்தின் சிறு பாதிப்பால் ஏற்படும் நிலைமை குறித்து விளக்கங்கள் வழங்கவும், அதன் தாக்கங்களின் தீவிரங்கள் குறித்தும் நாடு முழுமையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்புதான் தேசிய டிஸ்லெக்சியா இயக்கம்.

உலகம் முழுவதிலும் 5 குழந்தைகளில் ஒருவருக்கு படிப்பதன் மூலமும்,  எழுதுவதன் மூலமும் கல்வி கற்பதில் சிரமங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் கற்றுக் கொள்வதில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பல ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை என்பதோடு சில பெற்றோர்களோ தங்களின் குழந்தைகளுக்கு இத்தகைய நிலைமைகள் இருப்பதை ஏற்றுக் கொள்வதற்குத் தயங்குகின்றனர்.

இத்தகைய சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்குப் பொருத்தமான கற்பித்தல் முறையை உணர்ந்து, தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சிறப்பு பயிற்சிகளை வழங்குவதோடு, டிஸ்லெக்சியா குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்துகிறது.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு குழந்தையும் நல்ல முறையில் படிப்பதன் மூலமும், எழுதுவதன் மூலமும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறவேண்டும் என்றும் அவ்வாறு கற்றுக் கொள்வதில் அவர்களுக்குக் குறைபாடு இருப்பின் அவர்களுக்குரிய கற்பித்தல் முறைகள், சாதனங்கள் அவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என்றும் தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் நம்புகிறது.

“டிஸ்லெக்சியா பாதிப்பால் எந்த ஒரு மாணவனும் பள்ளியிலிருந்து பாதியிலேயே வெளியேறும் நிலைமையைப் பள்ளிகள் அனுமதிக்கக் கூடாது” என்று கூறுகிறார் தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் தேசியத் தலைவரான டாக்டர் முல்லை இராமையா. முல்லை இராமையா ஓய்வு பெற்ற இணைப் பேராசிரியராவார்.

“சில சமயங்களில் ஒருவருக்கு ஒருவர் என்ற முறையில் நேரடியாகவும் அல்லது ஒரே திறன்நிலை கொண்ட இரண்டு அல்லது மூன்று  குழந்தைகளுக்கு ஒரே நேரத்திலோ நாங்கள் போதிப்போம். ஒருவருக்கும் கூடுதலாக இருந்து கற்கும்போது அவர்களுக்குள் போட்டி இருக்கும் என்பதால், அவர்கள் கற்றுக் கொள்ளும் திறனும் அதிகரிக்கும். ஒருவர் மற்றொருவரை விட சிறப்பாக செயல்பட முயற்சி எடுப்பார். இது அவர்களின் திறனை வளர்க்க உதவும். இருப்பினும், ஒவ்வொரு குழந்தையிடத்திலும் தனித் தனியாக நேரடி கவனம் செலுத்துவது கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும். காரணம், ஒவ்வொரு குழந்தையின் தேவைகளும், திறன்களும் வெவ்வேறு விதமாக மாறுபட்டிருக்கும்” என்றும் டாக்டர் முல்லை தெரிவித்தார்.

“டிஸ்லெக்சியா குழந்தைகளுக்கான அறிவாற்றல் தர நிர்ணயம் (IQ –  intelligence quotient) சராசரி அளவிலோ, அல்லது அதிகமாகவோ இருக்கும். பலர் அவர்கள் மெதுவாகக் கல்வி பயிலக் கூடியவர்கள் என்றும், சொல்லிக் கொடுப்பதைப் புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்றும், குறைந்த அறிவாற்றல் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள்” முல்லை இராமையா டிஸ்லெக்சியா குழந்தைகள் குறித்து விளக்கினார்.

தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்துடன் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் 03-22011646 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்:

support@nodmalaysia.org

குழந்தைகள் வளரும்போதே, ஆரம்பத்திலேயே – அவர்களுக்கு 6 வயதாகும்போதே – அவர்களுக்கு டிஸ்லெக்சியா அல்லது கற்றல் முறைகளில் பாதிப்பு இருக்கிறதா என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்வதும் அந்த இளம் வயதிலேயே அவர்களுக்கு அதனை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் சிறப்பாக இருக்கும் என்றும் முல்லை இராமையா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

“அவர்களை சரியான முறையில் அணுகும்போது அவர்களுக்குத் தன்னம்பிக்கைத் தூண்டல் ஏற்படுகிறது. அவர்களுக்கான மன உறுதியும், தன்னம்பிக்கையும், அதிகரித்து கல்வி கற்பதில் அவர்கள் கூடுதல் ஆர்வம் செலுத்தத் தொடங்குவார்கள்” என முல்லை மேலும் கூறுகிறார்.

உதாரணமாக, “குற்றமும் டிஸ்லெக்சியாவும்” (Crime and Dyslexia)  என்ற ஆங்கில நூலில் வெளியிடப்பட்டிருக்கும், பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகளின்படி “ஏதாவது ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்ட 13 வயதுக்கும் குறைவான 25 ஆண் பிள்ளைகளை ஆய்வு செய்தபோது அவர்களுக்கு வாசிப்பது மற்றும் எழுதும் கற்றல் சிரமங்கள் இருந்தன” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் கல்வி அமைச்சுடன் இணைந்து டிஸ்லெக்சியா குறித்துப் பணியாற்றவும், டிஸ்லெக்சியாவுக்கும், சமுதாயத்தால் தனிமைப் படுத்தப்படுதல் மற்றும் குற்றச் செயல்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகள் குறித்து ஆய்வுகள் நடத்தவும் ஆர்வமும், விருப்பமும் கொண்டிருக்கிறது என்றும் முல்லை இராமையா தெரிவித்துள்ளார்.

நன்றி: ‘தி சன் டெய்லி’ – 29 ஜூன் 2017 தேதியிட்ட சன் ஆங்கில நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்)