கோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் என்ற மக்கள் நம்பிக்கைக் கூட்டணி நேற்று வியாழக்கிழமை தனது ஒருங்கிணைக்கப்பட்ட சின்னத்தையும், சில பொதுத் தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் – சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆகிய இருவரையும் முன்னிலைப்படுத்தும் பிரகடனத்தை முன்வைத்துள்ள பக்காத்தான் ஹரப்பான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த 100 நாட்களில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு, சேவை வரிவிதிப்பு நடைமுறையை இரத்து செய்வோம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
மேலும் பெட்ரோல் விலைகளை கட்டுப்படுத்துதல், மக்களின் சுமைகளைக் குறைத்தல், நாட்டின் முக்கியமான அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், ஊழலை அதன் ஊற்றுக் கண்ணிலேயே அழிக்கும் முயற்சிகளை முன்னெடுத்தல் போன்ற செயல்திட்டங்களையும் ஆட்சி அமைத்த அடுத்த நூறு நாட்களில் நிறைவேற்றுவோம் என துன் மகாதீர் தலைமையில் கூடிய எதிர்க் கட்சித் தலைவர்கள் அறிவித்திருக்கின்றனர்.
பக்காத்தான் ஹரப்பான் விடுத்திருக்கும் அறிவிப்புகளில் மற்றொரு முக்கிய அம்சம் 1எம்டிபி ஊழல் தொடர்பான விவகாரங்களை ஆராய அரச விசாரணை வாரியம் அமைக்கப்படும் என்பதுதான்.
பெல்டாவை மறு சீரமைக்கும் பணிகளும் முடுக்கி விடப்படும் என்றும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி முடிவெடுத்திருக்கிறது.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு தொடங்கிய பக்காத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.
பிரதமர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இரண்டு தவணைகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்ற சட்டமும் கொண்டு வரப்படும் என்றும் தங்களின் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்தல் சின்னமும் (படம்) வெளியிடப்பட்டது.