கடந்த செவ்வாய்க்கிழமை ஜூலை 18-ஆம் தேதி பெர்மிம் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லீம் இயக்கங்களின் கூட்டமைப்பு மாபெரும் ஹரிராயா ஒன்று கூடல் நிகழ்ச்சியை செர்டாங் விவசாயக் கண்காட்சி மையத்தில் நடத்தியது.
மலேசியாவில் இயங்கும் சுமார் 40 மலேசிய இந்திய முஸ்லீம் இயக்கங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டமைப்பாக பெர்மிம் இயங்கி வருகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். மலேசிய இந்திய முஸ்லீம்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து வழங்க வேண்டுமென நிகழ்ச்சியில் உரையாற்றிய பெர்மிம் தலைவர் தாஜூடின் ஷாகுல் ஹமீட் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றியபோது பிரதமர் நஜிப் மலேசிய இந்திய முஸ்லீம்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து ஆராயப்படும் என்றும் அதற்கான நடைமுறைகள் வகுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் கலந்து சிறப்பித்தார்.
பாரம்பரியமாக இந்திய முஸ்லீம்கள் தேசிய முன்னணிக்கு வாக்களித்து ஆதரவளித்து வந்துள்ளனர் என்றும் அவர்கள் தங்களின் ஆதரவை தேசிய முன்னணிக்குத் தொடர்ந்து வழங்கி வரவேண்டுமெனவும் நஜிப் கேட்டுக் கொண்டார்.
தேசிய முன்னணி அனைத்து மலேசியர்களையும் இந்திய முஸ்லீம்களையும் தொடர்ந்து பாதுகாத்து வரும் என்றும் நஜிப் உறுதியளித்தார்.
(படம்: நன்றி பெரித்தா ஹரியான் இணையத் தளம்)
இந்த நிகழ்ச்சியில் பிரெஸ்மா எனப்படும் இந்திய முஸ்லீம் உணவகங்களின் சங்கம் அறிமுகப்படுத்தும் சிறப்புக் கழிவு அட்டையை பிரதமர் அறிமுகப்படுத்தினார்.
உடல் பேறு குறைந்தவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த சிறப்பு அட்டை மூலம் 20 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்பதுடன் மாணவர்களுக்கு 10 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.