Home Featured நாடு மஇகாவில் மீண்டும் அதிக அளவில் இந்திய முஸ்லீம்கள் பங்கேற்பு!

மஇகாவில் மீண்டும் அதிக அளவில் இந்திய முஸ்லீம்கள் பங்கேற்பு!

1056
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1980-ஆம் ஆண்டுகளில் மஇகாவின் முக்கியத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா. மஇகாவின் தேசிய உதவித் தலைவராகப் போட்டியிட்டு தேர்வு பெற்று பதவியும் வகித்தவர்.

அது மட்டுமின்றி, மஇகாவின் சார்பில் செனட்டராகவும் நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் நீண்ட காலம் பதவி வகித்தவர். 1971 முதல் 1980 வரை சுமார் 9 ஆண்டுகள் நாடாளுமன்ற மேலவையின் துணை சபாநாயகராகப் பதவி வகித்தவர் அவர்.

#TamilSchoolmychoice

டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா…

அப்போதெல்லாம், செனட்டர்களுக்கு அவர்களின் தவணைக் காலம் நிர்ணயிக்கப்படவில்லை. பின்னர்தான், செனட்டர் ஒருவர் அதிக பட்சம் 2 தவணைகள் – அதாவது 6 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது.

சமுதாயத்தில் இருந்த மதிப்பு, மஇகா கொடுத்த அங்கீகாரம், அரசாங்கத்தில் அவருக்கு இருந்த நற்பெயர் ஆகியவற்றின் காரணமாக, உபைதுல்லா மிக நீண்ட காலத்திற்கு மஇகாவின் சார்பில் செனட்டராகவும், நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

அது மட்டுமல்ல!

கடந்த 13 ஜூன் 2017இல் மஇகா தலைமையகத்தில் நடத்தப்பட்ட நோன்பு திறக்கும் விருந்துபசரிப்பு நிகழ்ச்சியின்போது – வலமிருந்து இரண்டாவதாக (நீல சட்டையுடன்) இருப்பவர்தான் ஹிஷாமுடின் உபைதுல்லா – டான்ஸ்ரீ உபைதுல்லாவின் மூத்த புதல்வர்

ஒவ்வோர் ஆண்டும் மஇகாவின் தேசியப் பொதுப் பேரவைகளை அவைத் தலைவராக இருந்து நடத்தியதும் உபைதுல்லாதான். மஇகாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராக இருந்தவரும் அவர்தான்.

பல முறை தேசியத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாண்மைக் குழுவின் தலைவராக இருந்து தேசியத் தலைவர் தேர்தலை நடத்தியவரும் உபைதுல்லாதான். 1989-ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ சாமிவேலுவுக்கும், டத்தோ (இப்போது டான்ஸ்ரீ) சி.சுப்ரமணியத்துக்கும் இடையிலான தேசியத் தலைவர் தேர்தல் நடந்தபோது, தேர்தல் பொறுப்பாண்மைக் குழுத் தலைவராக இருந்து அந்தத் தேர்தலை நடத்தியவரும் உபைதுல்லாதான்!

இப்படிப் பல பெருமைகளைப் பெற்ற உபைதுல்லாவின் வாழ்வும், அரசியலும், பொதுவாழ்க்கை ஈடுபாடும் மஇகாவோடு பின்னிப் பிணைந்திருந்தது. அவரைப் போலவே பல இந்திய முஸ்லீம் தலைவர்கள் மஇகாவின் வரலாற்றோடு இரண்டறக் கலந்திருந்தனர்.

பகாங் மாநிலத் தலைவர் வி.வி.அபு

ஏறத்தாழ அதே காலகட்டத்தில் மத்திய செயலவை உறுப்பினராகவும், மஇகா பகாங் மாநிலத் தலைவராகவும் வலம் வந்தவர் டத்தோ வி.வி.அபு. இத்தனைக்கும் இவர் கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திய முஸ்லீம் அன்பர்.

இருப்பினும் பகாங் மாநிலத்தில் ஒரு கிளையின் மஇகா தலைவராக இருந்த அவர், மற்ற மஇகா தலைவர்கள், கிளைத் தலைவர்கள் ஆகியோரோடு கொண்டிருந்த அணுக்கமான தொடர்புகள்  காரணமாக, பகாங் மாநில தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுப் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார். (அப்போதெல்லாம், மஇகா மாநிலத் தலைவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டதில்லை).

பெரும்பான்மை இந்து மஇகா கிளைத் தலைவர்களைக் கொண்ட பேராளர்கள் அபுவை பகாங் மாநிலத் தலைவராகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்தார்கள். அந்த அளவுக்கு அபுவுக்கு மாநிலத்தில் செல்வாக்கும் ஆதரவும் இருந்தது. இந்து – முஸ்லீம் என்ற வேறுபாடுகள் இன்றி அந்த அளவுக்கு இணக்கமான சூழலும் மஇகாவில் நிலவியது.

ஜூன் 13-இல் மஇகா தலைமையகத்தில் நடந்த நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்ட முஸ்லீம் அன்பர்கள், வணிகப் பிரமுகர்கள்…

தொடர்ந்து, ஒவ்வொரு கட்சித் தேர்தலிலும், யாராவது அபுவை எதிர்த்து மஇகா பகாங் மாநிலத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத்தான் வந்தார்கள். அவ்வாறு போட்டியிட்டவர்கள் இந்துவாக இருப்பார்கள். இருந்தாலும், பெரும்பான்மை மஇகா  கிளைத் தலைவர்கள் வாக்களித்து வி.வி.அபுவைத்தான் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

இவ்வாறு இந்திய முஸ்லீம்கள் மஇகாவின் பல நிலைகளில் கட்சிப்  பொறுப்புகளிலும் மற்ற பொறுப்புகளிலும் இருந்து பணியாற்றினார்கள்.

இவர்களைத் தவிர, பினாங்கில் ஷேக் டாவுட், ஜோகூரிலிருந்து அப்துல் வாஹிட் ஆகியோரும் பிற்காலங்களில் மஇகாவின் வழி செனட்டர்களாக பதவி வகித்திருக்கிறார்கள்.

இந்திய முஸ்லீம்கள் மஇகாவில் அதிக அளவில் பங்கேற்பது குறித்தும், அவர்களுக்கு மஇகா கிளைகள் அமைக்கப்படுவது குறித்தும் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்பட்ட சந்திப்புக் கூட்டத்தில் டாக்டர் சுப்ரா, மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல் ஆகியோர்…

மஇகா தொடக்கப்பட்ட காலத்திலிருந்து இவ்வாறு இந்திய முஸ்லீம்களின் பங்கேற்பு மஇகாவில் அதிக அளவில் இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் இது பல காரணங்களால் குறைந்தாலும், இன்னும் கணிசமான இந்திய முஸ்லீம் கிளைத் தலைவர்கள் மஇகாவில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மஇகா தலைமையகத்தில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி

டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நோன்புப் பெருநாள் நிகழ்ச்சியும், நோன்பு துறக்கும் நிகழ்ச்சியும், மஇகா தலைமையகத்தில் இந்திய முஸ்லீம் கிளைத் தலைவர்கள், வணிகப் பிரமுகர்கள் ஆகியோருடன் இணைந்து கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது.

MIC-logoஇது மட்டுமின்றி இந்திய முஸ்லீம்களின் பங்கேற்பையும் ஈடுபாட்டையும் மஇகாவில் அதிகரிக்கும் திட்டத்தைக் கடந்த திங்கட்கிழமை (19 ஜூன் 2017) இந்திய முஸ்லீம் அன்பர்களுடன்  மஇகா தலைமையகத்தில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில்  மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிவித்திருக்கிறார்.

இடைப்பட்ட காலத்தில் கட்சியில் இந்திய முஸ்லீம்களின் பங்கேற்பு கொஞ்சம் தொய்வடைந்தது என்றும் எனினும் அதனை நிவர்த்திக்கும் விதமாக அதிகமான இந்திய முஸ்லீம் பங்கேற்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் அந்தக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். கட்சியில் பாரம்பரியமாக இந்திய முஸ்லீம்கள் கொண்டிருந்த ஈடுபாடு மேலும் தொடரும் என்றும் அதனை அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் டாக்டர் சுப்ரா அறிவித்திருக்கிறார்.

மேலே நாம் குறிப்பிட்ட வி.வி.அபு, டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா, போன்ற முக்கியத் தலைவர்கள் மஇகாவில் குறிப்பிடத்தக்க சேவைகளையும், தலைமைத்துவத்தையும் வழங்கியிருக்கின்றனர் என்றும் டாக்டர் சுப்ரா முஸ்லீம் அன்பர்களுடனான சந்திப்பின்போது நினைவுபடுத்தினார்.

இந்திய முஸ்லீம்களுக்காக மஇகா கிளைகள்

ஜூன் 19-ஆம் தேதி நடந்த கூட்டத்தின்போது மட்டும் ஏறத்தாழ 30 மஇகா கிளைகளுக்குரிய புதிய மஇகா கிளைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், இவை அனைத்தும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, மஇகா தலைமையகத்தால் அங்கீகரிக்கப்படும் என்றும் டாக்டர் சுப்ரா கூறியிருக்கிறார்.

“நாம் அனைவரும் மதத்தால் மட்டுமே வேறுபட்டுள்ளோம். காலங் காலமாக இனத்தாலும், மொழியாலும் நாம் அனைவரும் ஒன்றாக, ஒற்றுமையாகத்தான் செயல்பட்டு வந்துள்ளோம். இதே அடிப்படையில், நாம் தொடர்ந்து செயல்பட்டு அரசியல் ரீதியாக வலிமை பெறவேண்டும்” என்றும் டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் எனப்படும் இந்தியர்களுக்கான வியூகச் செயல் திட்டத்தின் கீழ், இந்திய முஸ்லீம்களும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், அவர்களின் நலன்களும், மேம்பாடுகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் டாக்டர் சுப்ரா அறிவித்திருக்கின்றார்.

இந்திய முஸ்லீம்கள் அதிக அளவில் மஇகாவில் பங்கேற்பதும், அவர்களுக்கும் உரிய அரசியல் வாய்ப்புகளை மஇகாவில் வழங்குவதும், கட்சியை மேலும் வலுப்படுத்தும், கட்சியின் ஆதரவுத் தளத்தை இந்தியர்களிடையே விரிவாக்கும் என்றும் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்