Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: வனமகன் – காதல், காமெடி, காடு எல்லாம் இருக்கு.. ஆனால்?

திரைவிமர்சனம்: வனமகன் – காதல், காமெடி, காடு எல்லாம் இருக்கு.. ஆனால்?

1185
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த கதாநாயகி சாயேஷா, குடும்ப நண்பரான பிரகாஷ்ராஜிடம் வளர்கிறார்.

சாயேஷாவின் தந்தை விட்டுச் சென்று பல ஆயிரம் கோடி சொத்துக்களை நிர்வகித்துக் கொண்டு, சாயேஷாவையும் ஆடம்பரமாக வளர்க்கிறார் பிரகாஷ்ராஜ்.

இப்படியிருக்க, பிரகாஷ்ராஜின் மகன் வருண், சாயேஷா மற்றும் இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து, அந்தமானுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு தடை செய்யப்பட்ட காட்டுப்பகுதியில் அத்துமீறி நுழையும் அவர்கள், காட்டுவாசிக் கூட்டத்தைச் சேர்ந்த ஜெயம்ரவியை காரில் மோதிவிடுகிறார்கள்.

#TamilSchoolmychoice

கார் மோதியதில் தலையில் அடிபட்டு உயிருக்குப் போராடும் ஜெயம்ரவியை, அந்தமானில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்து சிகிச்சையளிக்கிறார்கள்.

உயிர் பிழைத்துக் கொள்ளும் ஜெயம்ரவி புதிதாக மனிதர்களைப் பார்த்தவுடன் பல சேட்டைகள் பண்ணுகிறார். ஒரு கட்டத்தில் அவரை அந்தமான் காட்டிற்கே அழைத்துச் செல்கிறார்கள்.

அங்கு நடக்கும் சம்பவங்களும், ஜெயம்ரவி சாயேஷாவின் காரில் அடிபட்டதற்குப் பின்னணி இருக்கும் சில திருப்பங்களும் தான் பிற்பாதி கதை.

நடிப்பு

இத்திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு வசனமே இல்லை. படத்தில் மொத்தமே 4, 5 வார்த்தைகள் தான் பேசியிருக்கிறார். மற்றபடி, படம் முழுவதும் முகபாவணைகளையும், உடல்மொழியையும் மட்டுமே வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். காட்டுவாசிக்கு ஏற்றவாறு இயற்கையான உடலமைப்பு, சட்டை அணியாமலேயே பல காட்சிகளில் நடித்திருப்பது என இப்படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருப்பது தெரிகின்றது.

சாயேஷா தமிழுக்குப் புதுமுகம்.. அகில் படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமாகி, பின்னர் இந்தியில் நடித்து இப்போது தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகம் ஆகும் கதாநாயகிகளைப் போல் பார்த்தவுடன் சட்டென மனதில் நின்று விடும் முகம் கிடையாது. ஆனாலும், பணக்காரப் பெண் கதாப்பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தியிருக்கிறார். நடிப்பு சுமார் தான்.

படம் முழுவதும் காமெடிக்காக வருகிறார் தம்பி இராமையா. அவரது இருப்பு படத்தில் கொஞ்சம் கலகலப்பை ஏற்படுத்துகிறது. “மேடம் பாப்பா..” என்று சாயேஷாவை அழைப்பதாகட்டும், ஜெயம்ரவியை கலாய்ப்பதாகட்டும் சிரிப்பை வரவழைக்கிறார்.

இவர்கள் தவிர படத்தில், சாயேஷாவின் கார்டியனாக பிரகாஷ்ராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார். பல படங்களில் பிரகாஷ்ராஜ் இந்த மாதிரி கதாப்பாத்திரம் செய்திருக்கிறார் என்றாலும் கூட, எல்லாவற்றிலும் அவரது நடிப்பு திருப்தியையே தருகிறது.

திரைக்கதை

காடும் காடு சார்ந்த மனிதர்களையும் பற்றி சொல்ல வரும் பெரும்பாலான படங்கள், அதை சமூகநலப்படமாக எடுப்பதா? அல்லது கமர்ஷியல் படமாக எடுப்பதா? என்ற குழப்பத்திலேயே திரைக்கதையில் சொதப்பி விடுகின்றன.

இதனால் என்னாகிறது என்றால், காட்டுவாசிக் கூட்டத்தைச் சேர்ந்த கடம்பனையோ, இல்லை வனமகனையோ ஒரு சூப்பர் ஹீரோ அளவுக்கு திரையில் காட்டி, ஒரே ஆள் ஒரு இராணுவப் படையையே அழித்து ஒழிப்பது போல் சித்தரித்து அத்திரைப்படத்தை லாஜிக்கின்றி மசாலா படம் போல் மாற்றிவிடுகிறார்கள்.

இந்தப் படமும் அதே கதை தான். காட்டுவாசிக்கும், மாநகரவாசிக்கும் இடையே வரும் காதலை மையப்படுத்திக் காட்டுவதா? அல்லது கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் காடுகள் அழிக்கப்படுவதும், அங்கு காலங்காலமாக வாழ்ந்து வரும் காட்டுவாசிகள் விரட்டியடிக்கப்படுவதைக் காட்டுவதா? என்று யோசித்திருக்கும் இயக்குநர் விஜய், காடு கொஞ்சம், காதல் கொஞ்சம், காமெடி கொஞ்சம் என தொட்டிருக்கிறார்.

அதன் விளைவு கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையிலான காதலிலும் உப்பு சப்பு இல்லை, காட்டுவாசிகள் பற்றியும் அழுத்தமான காட்சிகள் இல்லாமல் போயிருக்கிறது.

பார்த்துப் பழகிப் போன காட்சிகள், பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் என வனமகனும் எல்லாம் இருந்தும், எதிலுமே ரசிகர்களை ஈர்க்காமல் வெறுமனே முடிகிறது.

அண்மையில் வந்த ‘கடம்பன்’ திரைப்படமும், வனமகனும், பல காட்சிகளில் ஒத்துப் போகின்றன. தொலைந்து போன கூட்டத்தைத் தேடுவதும், காட்டுக்குள் இராணுவத்தினரோடு சண்டை போடுவது என பல காட்சிகளில் பிரதிபலிக்கிறது. அதிலும் வனமகனில் சண்டைக் காட்சியில் புலி வந்து உதவி செய்வது.. ஷப்பா.. முடியல.

ஒளிப்பதிவு, இசை

திருவின் ஒளிப்பதிவில் எல்லாம் பளிச்செனத் தெரிகின்றது. ஆடம்பர பங்களாவையும், ஆதிவாசிகளின் குடியிருப்புகளையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார். பாடல் காட்சிகள் ஈர்க்கின்றன. குறிப்பாக ‘பச்சை உடுத்தி’ என்ற பாடலில் வரும் அருவி பின்னணி அழகு.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் இரகம். ஜெயம்ரவிக்கு கொடுத்திருக்கும் பின்னணி இசை காமெடிக் காட்சிகளுக்குச் சரியாகப் பொருந்தி சிரிக்க வைக்கின்றது.

மொத்தத்தில் ‘வனமகன்’ – காதல், காமெடி, காடு எல்லாம் இருக்கு.. ஆனா? எதிலுமே ஒரு அழுத்தம் இல்லாமல், புதுமை இல்லாமல் காகிதப் பூ போல் பளிச்சென மட்டும் இருக்கு.

-ஃபீனிக்ஸ்தாசன்