Home Featured நாடு விக்னேஸ்வரன் மேலவைத் தலைவராக பதவி நீட்டிப்பு

விக்னேஸ்வரன் மேலவைத் தலைவராக பதவி நீட்டிப்பு

988
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று ஜூன் 22-ஆம் தேதியுடன் தனது முதல் தவணை செனட்டர் பதவியை நிறைவு செய்த மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் ஒரு தவணைக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதோடு, தொடர்ந்து நாடாளுமன்ற மேலவைத் தலைவராக அவர் நீடிப்பதற்கும் பிரதமர் ஒப்புதல் தந்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும், மேலவைத் தலைவராகவும் பதவி ஏற்றுக் கொண்ட விக்னேஸ்வரனுக்கு மஇகா தலைவர்கள் பலரும் நேரில் சென்று தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

“மஇகாவின் கோரிக்கையை ஏற்று, கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை நீட்டித்திருப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு மஇகா சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மஇகா சார்பில் நம்பிக்கை வைத்தும், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் விக்னேஸ்வரன் மீது நம்பிக்கை வைத்தும் பிரதமர் மேற்கொண்டிருக்கும் இந்த நியமனத்திற்கு இந்திய சமுதாயத்தின் சார்பாகவும், கட்சியின் சார்பாகவும் எங்களின் நன்றியை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்” என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

விக்னேஸ்வரனுக்கு நேரில் சென்று தனது வாழ்த்துகளையும் டாக்டர் சுப்ரா தெரிவித்துக் கொண்டார்.

“தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த கௌரவமான பொறுப்பின் பெருமையை உணர்ந்து விக்னேஸ்வரனும் சிறந்த முறையில் தனது ஆற்றலையும், உழைப்பையும் தனது கடமைகளை நிறைவேற்ற வழங்குவார் எனப் பெரிதும் நம்புகிறேன். அதுமட்டுமின்றி நாட்டின் ஆட்சி அமைப்பு முறை வரிசையில்  மாமன்னருக்கும் துணை மாமன்னருக்கும் அடுத்த நிலையில் இருக்கும் மிகப் பெரும் கௌரவத்தைக் கொண்டது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியாகும். எனவே, இதனுடன் மிகப் பெரும் பொறுப்பும், கடமையும் இந்தப் பதவியைச் சார்ந்திருக்கின்றது. அதற்கேற்ப விக்னேஸ்வரனும் தனது கடமைகளை அர்ப்பண உணர்வுடன் சிறப்புடன் ஆற்றி, தனது பரந்த அரசியல் அனுபவம் மிக்க சேவைகளின் மூலம், மஇகாவுக்கும், இந்திய சமுதாயத்திற்கும் பெருமையைத் தேடித் தருவார் என நம்புகிறேன்” என்றும் டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.