கோலாலம்பூர் – மாறி வரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், உருவாகியிருக்கும் புதிய மலேசியா என்ற உணர்வுகளுக்கு ஏற்பவும் மலேசிய இந்திய முஸ்லீம்களின் நலன் கருதி புதிய அரசியல் கட்சி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை தோற்றுவிக்கப்பட்டது.
‘பார்ட்டி இந்தியா முஸ்லீம் பெர்சாத்து மலேசியா’ (Parti India Muslim Bersatu Malaysia -PIBM) என்ற பெயர்கொண்ட இந்தக் கட்சியின் அமைப்புத் தலைவராக டத்தோ ஜமாருல்கான் எம்.எஸ்.காடிர் செயல்படுகிறார்.
ஏற்கனவே, கிம்மா என்ற பெயரிலான இந்திய முஸ்லீம்களுக்கான கட்சி ஒன்று பல்லாண்டுகளாக இயங்கி வந்தாலும், கடந்த பொதுத் தேர்தல்வரை அந்தக் கட்சி தேசிய முன்னணியை தீவிரமாக ஆதரித்து வந்தது. அதுமட்டுமல்லாமல் அம்னோவின் இணைக் கட்சியாகவும் கிம்மா அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மலேசிய இந்திய முஸ்லீம்களைப் பிரதிநிதிக்க இன்னொரு புதிய கட்சி தேவைப்படுவதாக அதன் அமைப்பாளர்கள் நேற்று நடைபெற்ற கட்சி அறிமுக விழாவில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர்.
“மலேசிய இந்திய முஸ்லீம்களுக்கான அரசியல் குரலை அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களே எழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது என நாங்கள் கருதுகிறோம்” என ஜமாருல்கான் நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி தங்களின் கட்சியின் பதிவுக்கான விண்ணப்பம் சங்கப் பதிவிலாகாவுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும், தற்போது புதிய கட்சியின் அங்கீகாரத்துக்காகத் தாங்கள் காத்திருப்பதாகவும் ஜமாருல்கான் மேலும் தெரிவித்தார்.
பிஐபிஎம் கட்சி எந்த அணியோடு சாராமலும், தனித்து இயங்கும் என்றாலும், நடப்பு பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியோடு நட்புறவோடும், இணக்கமான முறையிலும் செயல்படும் எனவும் அதன் அமைப்பாளர்கள் மேலும் குறிப்பிட்டனர். மலேசியர்களுக்கான நலன்களுக்காகப் போராடும் எல்லாக் கட்சிகளோடும் தாங்கள் இணைந்து செயல்படப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மலேசிய ஐக்கிய இந்திய முஸ்லீம் கட்சியின் அமைப்புக் குழுவில் தேசியத் தலைவராக டத்தோ ஜமாருல்கான் காடிர், துணைத் தலைவராக டத்தோ மோசின் அப்துல் ரசாக், தலைமைச் செயலாளராக ஷாகுல் ஹமிட் ஷேக் டாவுட், பொருளாளராக முகமட் அன்சாரி முகமட் இப்ராகிம், ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் வாழும் 8 இலட்சம் இந்திய முஸ்லீம்களைப் பிரதிநிதிக்கும் வகையில் இந்தப் புதிய கட்சிய செயல்படும்.