Home கலை உலகம் திரைவிமர்சனம்: “சாமி-2” – விக்ரம், பாபி சிம்ஹா சரிநிகர் மோதல்!

திரைவிமர்சனம்: “சாமி-2” – விக்ரம், பாபி சிம்ஹா சரிநிகர் மோதல்!

1861
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழ்ப் படங்களைத் தொடராக இரண்டாவது பாகம் எடுக்கும் போக்கு வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஏற்கனவே, சிங்கம் படத்தை மூன்று பாகங்களாக எடுத்த இயக்குநர் ஹரி இந்த முறை கையிலெடுத்திருப்பது விக்ரம் நடிப்பிலான சாமி படத்தை! 15 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த படத்தை அதன் அப்போதைய திரைக்கதையோடு அழகாக இணைத்து, கதாபாத்திரங்களையும் ஒன்றிணைத்து ‘சாமி 2’ என அசத்தியிருக்கிறார் ஹரி.

அதற்காக அவரைப் பாராட்டும் அதே வேளையில், 15 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த அதே ஆறுமுகச்சாமியை அதே கம்பீரமான உடற்கட்டு, உடல்மொழி, இளமையான தோற்றம் என மீண்டும் திரையில் கொண்டு வந்து அசத்தியிருக்கும் விக்ரமையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

இந்த முறை விக்ரமுக்கு நடிப்பாலும், வில்லத்தனத்தாலும் சரிநிகர் போட்டி கொடுத்து படத்தின் தரத்தையும் உயர்த்துவது பாபி சிம்ஹா. இராவணப் பிச்சையாகப் பின்னியெடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

சாமி படத்தில் ஆறுமுகச்சாமியால் கொல்லப்பட்ட வில்லன் பெருமாள் பிச்சைக்கு இலங்கையில் ஒரு குடும்பம் இருந்தது என்பது போல் காட்டி அங்கிருந்து தொடங்குகிறது சாமி-2.

வழக்கம்போல் முந்தைய வில்லனின் மகன்கள் ஆறுமுகச்சாமியைப் பழிவாங்கும் கதை என நாம் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, சட்டென்று அவர்களுக்கு இடையிலான மோதலை அப்படியே நிறுத்தி விட்டு, 28 வருடங்களுக்குப் பிறகு என புதுடில்லிக்கு சடாரென்று திரைக்கதையை மாற்றிக் கொண்டு போகும் ஹரியின் உத்தியால் மொத்த திரையரங்கே நிமிர்ந்து உட்காருகின்றது.

அதன்பின்னர் அடுத்தடுத்து விரியும் குழப்பமில்லாத, அழகான திரைக்கதையால் படம் இறுதிவரை விறுவிறுப்போடும், சுவாரசியத்தோடும், பரபரப்போடும் நகர்கிறது.

கடைசி அரை மணி நேரம் நாம் எதிர்பார்ப்பதைப் போலவே, விரட்டல்கள், கத்திக் குத்துகள், துப்பாக்கிச் சூடுகள், சண்டைகள் எனத் தொடர்வது மட்டும் சற்று போரடிக்க வைக்கிறது.

திரிஷாவுக்கு பதிலாக ஐஸ்வரியா ராஜேஷ் அவரது பங்குக்கு நிறைவாக செய்திருந்தாலும், நம்மால் திரிஷாவை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இன்னொரு கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தனது வழக்கமான துறுதுறுப்பான நடிப்பால் கவர்கிறார். இருந்தாலும், அவருக்கு தீனி போடும் அளவுக்கு படத்தில் இடமில்லை.

சாமி 2 – கீர்த்தி சுரேஷ், இயக்குநர் ஹரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், விக்ரம்…

நகைச்சுவைக்கு சூரி. வழக்கம்போல் புதுடில்லியில் இந்தி தெரியாத மாமாவாக வந்து சிரிப்பூட்டுகிறார். இருந்தாலும், அதே பாணி நடிப்பு, உடல்மொழி என சூரி கொஞ்சம் போரடிக்க வைக்கிறார்.

அழகான தரமான ஒளிப்பதிவு. பிரியனின் கேமரா புதுடில்லி, திருநெல்வேலியின் தெருக்கள், பரந்து விரிந்த வயல்வெளிகள், இராஜஸ்தானின் பாலைவன மணப் பிரதேசம் என அத்தனை காட்சிகளையும் அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறது.

பாடல்கள் சுமார்தான். மற்ற நடிகர்களுக்கும் அதிக வேலையில்லை.

சாமி படத்தின் அந்த கதாபாத்திரச் செதுக்கல் இரண்டாவது பாகத்தில் இல்லை என்பது ஒரு குறை.

மற்றபடி விக்ரம் – பாபி சிம்ஹா இடையிலான மோதல்களின் விறுவிறுப்பால் மட்டுமே படம் பார்க்கும்படி அமைந்திருக்கிறது.

-இரா.முத்தரசன்