வாஷிங்டன், மார்ச் 25 – அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உரையாற்ற, நரேந்திர மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் சார்பில், “வார்ட்டன் இந்தியா எகனாமிக் போரம்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, “வீடியோ கான்பரன்சிங்’ மூலம் உரையாற்ற இருந்தார்.
எனினும், அப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களில் சிலர் அவர் உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, மோடியின் உரை ரத்து செய்யப்பட்டது. நரேந்திர மோடியின் உரை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பென்சில்வேனியாவில் நூற்றுக்கும் அதிகமான அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரில் இருந்து வந்திருந்த அவர்கள், மோடியின் உருவம் அச்சிடப்பட்ட, “சுவரொட்டிகளை ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் உள்ள ஹாரிசன் அரங்கம் வரை அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
“புகழ்பெற்ற பென்சில்வேனியா பல்கலைக்கழகம், மூன்று பேராசிரியர்கள் எதிர்த்தனர் என்பதற்காக மோடியின் உரையை ரத்து செய்தது எங்களுக்கு வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பேச்சுரிமையை நசுக்கும் செயலில், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது’ என, பேரணியில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.