Home நாடு பக்காத்தான் தலைமை: கெடா, பெர்லிசுக்கு முக்ரிஸ் – ஜோகூருக்கு மொகிதின்!

பக்காத்தான் தலைமை: கெடா, பெர்லிசுக்கு முக்ரிஸ் – ஜோகூருக்கு மொகிதின்!

810
0
SHARE
Ad

Mahathir-Muhyiddin-Mukhriz-comboகோலாலம்பூர் – துன் மகாதீர் தலைமையிலான பிரிபூமி பெர்சாத்து கட்சி பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்குத் தலைமையேற்று அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் நடப்பு ஆட்சியைக் கைப்பற்ற மும்முரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டது.

கெடா மாநிலத்தை முன்னின்று வழிநடத்த அந்த மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர், அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கி விட்டார். கெடா மாநிலத்தை பக்காத்தான் கைப்பற்றினால், அந்த மாநிலத்தின் மந்திரி பெசாராக மீண்டும் முக்ரிஸ் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

demolation-mukhrizஅதே வேளையில், மத்தியில் பக்காத்தான் ஆட்சியைக் கைப்பற்றினால், வேறொருவரை மந்திரி பெசாராக நியமித்து விட்டு, முக்ரிஸ் மத்திய அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, முக்ரிஸ் கெடா மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதி ஒன்றிலும், நாடாளுமன்றத் தொகுதி ஒன்றிலும் போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அந்த நாடாளுமன்றத் தொகுதியும் கெடாவிலேயே இருக்குமா அல்லது வேறு மாநிலத்தில் இருக்குமா என்பது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

கெடாவுக்கு அடுத்த மாநிலம் – மிக அருகாமையில் இருக்கும் மாநிலம் – என்பதால் பெர்லிஸ் மாநிலத்தின் தலைமைப் பொறுப்பையும் முக்ரிஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

துன் மகாதீர் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், அவர் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் என்ற ஆரூடங்கள் நிலவுகின்றன.

mahathir-mohamadலங்காவி தொகுதிக்கும் மகாதீருக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உண்டு. மருத்துவராக தனது பணியைத் தொடக்கிய காலத்தில் மகாதீர், மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த லங்காவி தீவில் பல மாதங்கள் அரசாங்க மருத்துவராகப் பணியாற்றியிருக்கிறார்.

பின்னர் பிரதமராகப் பொறுப்பேற்றவுடன், லங்காவி தீவை மேம்படுத்தி உலக வரைபடத்தில் அந்தத் தீவை இடம் பெறச் செய்தவர் மகாதீர்.

இதன் காரணமாக, லங்காவி தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் எனக் கணிக்கப்படுகிறது.

ஜோகூரில் தலைமையேற்கும் மொகிதின் யாசின்

அம்னோவின் பிறப்பிடமான ஜோகூர் மாநிலம், மொகிதின் யாசின் மந்திரி பெசாராகவும் ஆட்சி நடத்திய மாநிலமாகும்.

Muhyideen-Yassin-Sliderஇதன் காரணமாக, ஜோகூர் மாநிலத்தின் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்குத் தலைமையேற்கும் மொகிதின் அந்த மாநிலத்தைக் கைப்பற்றுவது அவ்வளவு சுலபமாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், தனது பாரம்பரியத் தொகுதியான பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் மொகிதின் யாசின் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஜோகூர் மாநில சட்டமன்றத் தொகுதி ஒன்றிலும் அவர் போட்டியிடுவாரா என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

  • இரா.முத்தரசன்