புதுடெல்லி, ஜனவரி 17 – மின்கலத்தில் (பேட்டரி) அடிக்கடி தீப்பிடிப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, போயிங் டிரீம்லைனர் விமானங்களை நிறுத்தி வைக்கவேண்டும் என்று அமெரிக்க விமான போக்குவரத்து துறை ஆணையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் இந்த வகையைச் சேர்ந்த 50 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம், டிரீம்லைனர் என்ற பெயரில் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட விமானத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. குறைந்த எடை, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் டிரீம்லைனர், விமான நிறுவனங்களை கவர்ந்து இழுத்தன. இதையடுத்து, இந்த விமானத்தை பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சேவையில் இணைத்தன. இந்தியாவில் அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா 6 விமானங்களை வாங்கி, பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தி உள்ளது.
டிரீம்லைனர் விமானத்தில் உள்ள லித்தியம் மின்கலத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுவது தெரிய வந்தது. சமீபத்தில் பாஸ்டன் நகரில் டிரீம்லைனர் விமானம் ஒன்று அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதற்கு காரணம், அதன் பேட்டரியில் தீப்பிடித்ததுதான்.நேற்று முன்தினம் ஜப்பான் வான்பகுதியில் பறந்து கொண்டிருந்த டிரீம்லைனர் விமானத்தின் பேட்டரியிலும் தீப்பிடித்தது. அதனால் அதுவும் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இதுபோன்ற தொடர் சம்பவங்களை தொடர்ந்து, உடனடியாக உலகம் முழுவதும் இந்த வகை விமானத்தின் போக்குவரத்தை நிறுத்தி வைக்கும்படி அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் (எப்ஏஏ), எல்லா நாட்டு விமான போக்குவரத்து அமைப்புக்களுக்கும் எச்சரிக்கை விடுத்தது.