கோலாலம்பூர் – கடந்த ஆண்டு ஷாலினி பாலசுந்தரம் இயக்கத்தில் வெளிவந்து மலேசிய ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்ற, ‘கீதையின் ராதை’ திரைப்படம் மலேசியத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் ஆன திரைப்படங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.
அதற்கு முன்னதாக ‘மைந்தன்’, ‘அப்பளம்’ என்ற இரு திரைப்படங்கள் அதிக வசூலைப் பெற்றிருந்த நிலையில், தற்போது அப்பட்டியலில் ‘கீதையின் ராதையும்’ இணைந்திருக்கிறது.
இதனிடையே, ஸ்டோரி பிலிம்ஸ் செண்ட்ரியான் பெர்ஹாட் என்ற சொந்த நிறுவனம் துவங்கிய ஷாலினி பாலசுந்தரம் தனது அடுத்தத் திரைப்படத்தைத் தயாரித்து, இயக்கி, கதாநாயகியாகவும் நடித்து வருகின்றார்.
அத்திரைப்படத்திற்கு, ‘திருடாதே பாப்பா திருடாதே’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
இத்திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு மற்றும் நடிகர் நடிகைகள் அறிமுகம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெற்றது.
இச்சந்திப்பில், இயக்குநர் ஷாலினி, ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் சத்தீஸ் நடராஜன், கதாநாயகன் சரேஸ்டி7, முக்கியக் கதாப்பாத்திரங்களின் நடித்து வரும் யுவராஜ், கபிலன், ஜெகன், மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
பெண்களிடம் நகை திருடப்படுவது தான் படத்தின் முக்கியக் கருவாக இருக்கப் போவதாக ஷாலினி குறிப்பிட்டார். தான் சிறுவயதாக இருந்த போது தனது வாழ்வில் நடந்த மூன்று முக்கியத் திருட்டுச் சம்பவங்கள் தான் இப்படி ஒரு படத்தை இயக்கத் தன்னைத் தூண்டியதாக ஷாலினி தெரிவித்தார்.
என்றாலும், படத்தில் காதலும், ஆக்சனும் கலந்து தான் இருக்கும் என்றும், நிச்சயமாக மலேசிய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் என்றும் ஷாலினி தெரிவித்தார்.
எப்படி ‘கீதையின் ராதை’ திரைப்படம் இளைஞர்களைக் கவரும் விதமாக காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தோ, அதை விட இன்னும் சிறப்பான திரைக்கதையோடு, ‘திருடாதே பாப்பா திருடாதே’ திரைப்படம் காதலோடு, ஆக்சனும் கலந்திருக்கும். தானும் தனது கணவர் சதீஸ் நடராஜனும் பல ஆய்வுகள் செய்து திரைக்கதையை உருவாக்கியதாகவும் ஷாலினி தெரிவித்தார்.
அதனால் தான் தலைப்பிலேயே அதன் உள்ளடக்கம் குறித்த கருத்து சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார் இயக்குநர் ஷாலினி.
‘திருடாதே பாப்பா திருடாதே’ திரைப்படத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகைகள் தேர்வைக் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி, ஷாலினியின் ஸ்டோரி பிலிம்ஸ், தலைநகர் சோமா அரங்கிலுள்ள விஸ்மா துன் சம்பந்தனில் நடத்தியது. அதில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
படத்தின் கதாநாயகன் சரேஸ் டி7, கதாநாயகியாக ஷாலினி, முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஜெகன்நாதன், முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘வெண்பா’ புகழ் யுவராஜ் ஆகி்யோரைத் தவிர, கதைக்குத் தேவையான மற்ற இளம் நடிகர், நடிகைகள் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் ஷாலினி தெரிவித்தார்.
‘திருடாதே பாப்பா திருடாதே’ திரைப்படத்தில் மொத்தம் 8 முக்கியக் கதாப்பாத்திரங்கள் உள்ளன. அவற்றில், சரேஸ் டி7, ஷாலினி பாலசுந்தரம், கபில், ஜெகன்நாதன், யுவராஜ், ஹேமா ஜி, மஞ்சுளா மற்றும் இர்பான் ஜைனி ஆகியோர் நடிக்கின்றனர்.
திட்டமிட்டபடி, தற்போது படப்பிடிப்பு மிகச் சிறப்பாக நடைபெற்று வருதாக, இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், இந்தத் திரைப்படத்தில் தனது குழுவினர் அனைவருமே மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருவதாகவும் ஷாலினி குறிப்பிட்டார்.
‘கீதையின் ராதை’ திரைப்படத்தில், ‘என்னைக் கொல்லாதே’ என்ற மிகப் பெரிய வெற்றிப் பாடலைக் கொடுத்த ஜித்திஸ் தான், ‘திருடாதே பாப்பா திருடாதே’ திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.