Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘ஸ்பைடர்’ – எதிர்பார்த்த விறுவிறுப்பு இல்லை!

திரைவிமர்சனம்: ‘ஸ்பைடர்’ – எதிர்பார்த்த விறுவிறுப்பு இல்லை!

1191
0
SHARE
Ad

spyder-movie-13கோலாலம்பூர் – மகேஷ் பாபுவைக் கதாநாயகனாக்கி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியிடும் வகையில், இரு மாநில மசாலாக்களையும் கலந்து செய்த படைப்பாக ‘ஸ்பைடர்’ திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

காவல்துறையின் கீழ் இரகசியமாக இயங்கி வரும் ஒரு பிரிவு தான் கால் டிரேசர்ஸ். அதாவது சந்தேக நபர்களின் செல்போன் எண்களை டிரேஸ் செய்து அவர்கள் யாருடன் பேசுகிறார்கள்?, எங்கே செல்கிறார்கள்? போன்ற விவரங்களைக் கண்டறிவது.

அங்கு தான் அதிபுத்திசாலியான சிவா (மகேஷ் பாபு) வேலை செய்கிறார். ஆனால் அந்த வேலையில் இருந்து கொண்டே இரகசியமாக மற்றொரு வேலையும் செய்கிறார்.

#TamilSchoolmychoice

அதாவது இவராகவே ஒரு மென்பொருள் ஒன்றைக் கண்டறிகிறார். பொதுமக்கள் யாரேனும் ஆபத்தில் இருப்பதாக யாருடனாவது பேசினால், உடனே மகேஷ் பாபுவுக்குத் தகவல் கிடைத்துவிடும். உடனே அந்த இடத்திற்குச் சென்று அவர்களைக் காப்பாற்றுகிறார்.

Mahesh-Rocking-Still-in-Spyderஇப்படியாகப் போய்க் கொண்டிருக்கையில், திடீரென அந்தப் பகுதியில் தொடர் கொலைகள் நடக்கிறது. காவல்துறை ஒருபுறம் கொலையாளியைத் தேடிக் கொண்டிருக்க, தனிநபராக தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திக் கொலையாளியைத் தேடுகிறார் மகேஷ் பாபு. கொலையாளி யார்? இந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன? என்பது தான் படத்தின் சுவாரசியம்.

மகேஷ் பாபு.. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பு. அதுவே அவரது கதாப்பாத்திரத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. என்றாலும் பின்னணிக் குரல் நாடகத்தனமாக தெரிகின்றது. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Spyder-Movie-Stills-03ரகுல் பிரீத் சிங்.. முருகதாஸ் படங்களில் கதாநாயகி எங்காவது ஒரு இடத்தில் சட்டென கவனம் ஈர்ப்பார். அந்த இடத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியப்போம். ஆனால் இதில் ரகுலின் கதாப்பாத்திரம் படு மொக்கை. அதிலும் அவரை ஆபாசப் படம் பார்க்க வைத்து, முன்பின் தெரியாத ஒருவருடன் கலவி செய்ய ஆசைப்படும் பெண்ணாகச் சித்தரித்திருப்பது தான் பரிதாபம்.

அதை விடக் கொடுமை, ஒரு காட்சியில் மகேஷ் பாபுவை வைத்து, “உன் பிரண்டு வீட்ல யாருமில்லை. நீ தனியா தான் அங்க இருக்க.. இப்ப நான் அங்க வரணும். அதானே? வேற வேலையே இல்லையா? படிச்ச பொண்ணு தானே?” என்று கேவலமாகக் கேட்க வைத்திருப்பது கொடுமையின் உச்சம்.

எஸ்.ஜே.சூர்யா, பரத் இருவரின் நடிப்பும் அருமை. அதிலும் அவர்களின் சிறுவயதுக் கதாப்பாத்திரங்களாக வரும் சிறுவர்களின் நடிப்பு அதை விட அருமை.

Mahesh-First-Look-in-Spyder-2சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்கின்றன. பின்னணி இசையில் உடுக்கைச் சத்தமும், சீன நாட்டு இசையும் காட்சிகளுக்கு வீரியம் சேர்க்கின்றன.

திரைக்கதையைப் பொறுத்தவரையில், எங்கும் தொய்வில்லை என்றாலும் கூட, பார்த்துப் பழகிய காட்சிகளால் அவ்வளவாக ஈர்க்கவில்லை.

மர்ம முடிச்சுகள் அனைத்தும் உடனுக்குடன் கட்டவிழ்க்கப்படுவதால் விறுவிறுப்பாக இல்லை. ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் 2 மணி நேரத்தில் கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் அந்த காட்சிகளில் மட்டும் முருகதாஸ் தெரிகிறார். லாஜிக் பற்றிய கவலையின்றி பல முக்கியக் காட்சிகள் நகர்கின்றன.

விசாரணையில் எஸ்.ஜே.சூரியா பேசும் அந்த 10 நிமிட வசனம் மட்டும் ரசனை.

ஆக மொத்தத்தில், ‘ஸ்பைடர்’ – எதிர்பார்த்த விறுவிறுப்பு இல்லை.

-ஃபீனிக்ஸ்தாசன்