Home கலை உலகம் தமிழ்ப்பட இயக்குநர் சசி, மலேசிய திரைப்பட விழாவில் உரை!

தமிழ்ப்பட இயக்குநர் சசி, மலேசிய திரைப்பட விழாவில் உரை!

1190
0
SHARE
Ad

sasi-director-talk-malaysia-22092017 (1)கோலாலம்பூர் – கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்று முடிந்த 29-வது மலேசியத் திரைப்பட விழாவை முன்னிட்டு, மலேசியத் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் (FDAM -Film Directors Association of Malaysia) மலேசியத் திரைப்படக் கழகத்தின் (FINAS) ஆதரவுடன் ‘ஆசிய இயக்குநர்கள் உரை  (“ASIA DIRECTOR TALK”) என்னும் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த 22 செப்டம்பர் 2017-ஆம் நாள் கோலாலம்பூர் தேசிய கலை அரங்க மண்டபத்தில் (Auditorium Balai Seni Visual Negara) நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு, பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் சசி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

sasi-director-talk-malaysia-22092017 (4)இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான சசி, ”சொல்லாமலே”,” பூ”, “ஐந்து,ஐந்து,ஐந்து” மற்றும் கடந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “பிச்சைக்காரன்”  ஆகிய திரைப்படங்களின் இயக்குநராவார். இவரோடு ’ஏப்ரல் மாதத்தில்’ மற்றும் ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படங்களின் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அண்மையில் ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும் ஸ்டான்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

#TamilSchoolmychoice

அது மட்டுமின்றி, ‘பெரியார்’ என்ற திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாத்திரத்தில் தோன்றியவர் ஸ்டான்லியாவார்.

சசியின் திரைப்பட அனுபவங்கள்

sasi-director-talk-malaysia-22092017 (3)சசி, ஸ்டான்லி, ஒத்மான் ஹப்ஷாம்…

இயக்குனர் சசி இந்த நிகழ்ச்சியில் உரையாடியதோடு, தனது திரைத்துறை அனுபவங்களையும் மலேசியர்களிடையே பகிர்ந்துக்கொண்டார். இக்கலந்துரையாடலை மலேசிய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் (FDAM)  தலைவரான ஒத்மான் ஹப்ஷாம் துவக்கி வைக்க, மலேசிய திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் மலேசிய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளரான லோகன் வழிநடத்தினார்.

தனது உரையைத் தொடக்கிய இயக்குனர் சசி, அவரைப் பாதித்த மலேசிய திரைப்படமான ’செப்பெட்’ பற்றியும் அதன் இயக்குனர் யாஸ்மின் அஹ்மட் பற்றியும் சில வார்த்தைகள் பகிர்ந்துக் கொண்டார். அவரின் இழப்பு மலேசிய திரைப்படத் துறைக்கு மட்டுமில்லாமல் உலக சினிமாவுக்கே பேரிழப்பு என்று கூறினார்.

sasi-director-talk-malaysia-22092017 (2)அதன் பிறகு அவர் சினிமாவுக்கு வந்த புதிதில் சந்தித்த போராட்டங்களையும், அவரது முதல் படமான “சொல்லாமலே”  இயக்க அவர் சந்தித்த போராட்டங்களையும் பற்றி கூறினார். அப்பொழுது இயக்குனர் எஸ்.எஸ். ஸ்டான்லி முதன்மை உதவி இயக்குனராக அத்திரைப்படத்தில் பணியாற்றியதால், அவரும் தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்துக்கொண்டார்.

பிறகு மலேசியாவின் லோகன், இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் ஸ்டான்லி ஆகிய மூவருக்கும் இடையே ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் முக்கியமாக தற்போதைய தமிழ் சினிமாவின் நிலை மற்றும் வணிகம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் கதைக்கு பதில் கதாநாயகர்களுக்கு அதிக அளவில் மதிப்பும் முக்கியத்துவமும் தரப்படுகிறதா என்கிற கேள்வி வருகையாளர்களின் முன்வைக்கப்பட்டது. அப்பொழுது  இயக்குனர் சசி இதுவரைத் தான் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் தான் கதாநாயகனை விட கதைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், வியாபார ரீதியில் சில கதாநாயகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை மறுக்க முடியாது என்று ஒப்புக்கொண்டார். இருப்பினும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மக்கள் என்றுமே நிராகரித்தது இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மலேசிய இளம் இயக்குநர்களுக்கு சசி வழங்கிய ஆலோசனைகள்

மேலும், திரைப்பட இயக்கத் துறையில் கால் பதித்து வளரத் துடிக்கும் இளம் மலேசிய இயக்குநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள், கற்றுக் கொள்ள வேண்டியவை குறித்தும் சசி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

உதாரணமாக, தனது அனுவத்தில் இயக்குனர் சசி ஒரு சுவாரசியமான சம்பவத்தை நிகழ்ச்சியில் பகிர்ந்துக்கொண்டார். அவர் இயக்கிய முதல் திரைப்படமான “சொல்லாமலே” வெளிவந்த நேரம். அதை பார்த்த ஓர் உதவி இயக்குனர் அவரிடம் வந்து இத்திரைப்படத்தை மிகவும் பாராட்டிய பின், அடுத்த படத்தை ஒரு பெரிய ஹீரோவை வைத்து இயக்க முயற்சிக்கும்படி கேட்டுக்கொண்டாராம். ஆனாலும் அதன் பிறகு இயக்குனர் சசி கதைக்கே முக்கியத்துவம் தந்து தனது திரைப்படங்களை எடுத்து வந்தார். ஆனால் அந்த உதவி இயக்குனரோ, இயக்குனராகிய பிறகு நல்ல கதையை தேர்ந்தெடுத்ததோடு  நிறுத்திக்கொள்ளாமல், அதை பெரிய ஹீரோக்களுக்கேட்ப திரைக்கதை அமைத்து, நல்ல ஜனரஞ்சக திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக இன்று உருவாகியிருக்கிறார் எனக் கூறினார். “அவர் வேறு யாரும் இல்லை, கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிய இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ்தான்” என்பதையும் சசி பின்பு தெரியப்படுத்தினார்.

எனவே, இதுபோன்று இளம் இயக்குநர்கள் தங்களின் பாதையில் சரியான திட்டமிடலோடு, தாங்கள் சாதிக்க நினைக்கும் கனவுகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

கேள்வி-பதில் நேரத்தின் போது வந்திருந்த பங்கேற்பாளர்களில் ஒருவர் மலேசியத் தமிழ் திரைப்படங்களின் நிலை பற்றி கேட்க, இயக்குனர் சசி ஒரு திரைப்படம் எவ்வளவுக்கெவ்வளவு அந்நிய திரைப்பட பாதிப்பு இல்லாமல் உள்ளூர் படைப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது உலக சினிமாவாக போற்றப்படும் என்றார்.

அதனைத் தொடர்ந்த இயக்குனர் ஸ்டான்லி, “தமிழ் நாட்டு திரைப்படங்களை தயவு செய்து பின்பற்றாதீர்கள். அதை எடுக்க நாங்கள் இருக்கிறோம். நீங்கள் உங்கள் நாட்டில் இருக்கும் பிரச்சனைகளையும், கலாச்சாரங்களையும் நேர்த்தியாக பதிவு செய்யுங்கள். அதை நாங்களே தேடி வந்து பார்க்கிறோம்.” என்றும் கூறினார்.

நிகழ்ச்சியின் முடிவில், சிறப்பு விருந்தினர்களான இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் எஸ். எஸ். ஸ்டான்லி இருவரும், மலேசிய இயக்குனர் சங்கத்தின் கௌரவ உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டு திரைப்பட இயக்குனர்களில் மலேசிய இயக்குனர்கள் சங்கத்தில் கௌரவ உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டு உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட முதல் நபர்கள் இவர்களே ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.