இலண்டன் – தனிப்பட்ட வருகை மேற்கொண்டு இலண்டன் வந்திருக்கும் மலேசிய கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் சிறப்புரையாற்றவும், கலந்துரையாடல் கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த சந்திப்புக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (29 செப்டம்பர் 2017) இலண்டன் நேரப்படி பிற்பகல் 3.00 முதல் 4.30 மணி வரை நடைபெறும்.
பிரிட்டனில் இயங்கும் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு (Federation of Tamil Associations, UK) மற்றும் பிரிட்டனுக்கான தமிழ்நாடு வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு (Tamil Nadu Chamber of Commerce) ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் குறிப்பாக இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியத் தூதரகம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
ஒருங்கிணைப்பு அமைச்சர் ஏ.எஸ்.இராஜன் முன்னின்று ஏற்பாடுகள் செய்திருக்கும் இந்தச் சந்திப்புக் கூட்டம் கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்:
High Commission of India,
India House,
London WC2B 4NA.
நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுக்கே இட வசதிகள் இருப்பதால், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்காணும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களின் வருகையை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்:
மின்னஞ்சல்: selingeorge@gmail.com
தொலைபேசி: 07758204747.
முத்து நெடுமாறன் குறித்த பின்னணி
முத்து நெடுமாறனுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்டிருக்கும் அழைப்புக் கடிதத்தில் அவரது பின்புலம் குறித்த தகவல்களும் பின்வருமாறு வழங்கப்பட்டிருக்கின்றன:
“மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் முரசு சிஸ்டம்ஸ் என்ற மலேசிய நிறுவனத்தின் தோற்றுநரும், தலைமைச் செயல் அதிகாரியுமாவார். கணினியில் எழுத்துருக்கள் மற்றும் உள்ளிடு தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் தொழில் நுட்பத் துறையில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.
“சங்கம்” என்ற குழுமப் பெயரிலான இந்திய மொழிகள் மற்றும் இந்தோ-சீன மொழிகளுக்காக எழுத்துருக்களை அவர் வடிவமைத்து உருவாக்கியிருக்கிறார். இவை தற்போது ஆப்பிள் நிறுவன கையடக்க மற்றும் மேக் கணினிகளில் இயங்கும் ஐஓஎசு, மற்றும் எச்.டி.சி செல்பேசிகளில் இயங்கும் அண்டுரோய்டு தொழில்நுட்பத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.
கணினியில் தமிழ் உள்ளிடு முறைக்காக அவர் வடிவமைத்த எழுத்துகளுக்கான விசை (keyboards for Tamil text input) மேக் ஓஎசு 10.4 தொழில் நுட்பத்தில் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
எச்டிசி செல்பேசிகளில் இயங்கும் அண்டிரோய்டு மற்றும் உள்ளிடு தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் இந்திய மற்றும் இந்தோ-சீன மொழிகளுக்கான எழுத்துரு வடிவங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவையாகும்.
1993-ஆம் ஆண்டிலேயே ‘முரசு அஞ்சல்’ என்ற பெயரில் கணினியில் தமிழ் எழுத்துருக்களுக்கான மென்பொருளை உருவாக்கி உலவ விட்டவர் முத்து நெடுமாறன். இதற்குப் பின்னரே கணினியிலும், இணையத்திலும், மின்னஞ்சல் பரிமாற்றங்களிலும் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. முரசு அஞ்சல் தற்போது பல்வேறு இயங்கு தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இன்றைய கணினி, செல்பேசி யுகத்தில் கணினிகளிலும் செல்பேசிகள் மற்றும் கையடக்கக் கருவிகளிலும் மிக அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் உள்ளிடு தொழில்நுட்பமாக ‘முரசு அஞ்சல்’ திகழ்கிறது.”