கோலாலம்பூர் – அடுத்த மாதம் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் 2017 போட்டியில் மலேசியா சார்பில் கலந்து கொள்ளவிருக்கும் சமந்தா காதி ஜேம்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியில் அனைவரையும் தனது வித்தியாசமான ஆடையால் கவர்ந்தார்.
போட்டியின் தேசிய ஆடைப் பிரிவில், மலேசியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான ‘நாசி லெமாக்’ போல் உடையணிந்து சமந்தா நடந்து வந்தார்.
இந்த ஆடையை வடிவமைத்த ஆடைவடிவமைப்பாளர் பிரியன் கூ கூறுகையில், இந்த ஆடையைத் தயாரிக்க 400 மணி நேரங்கள் தேவைப்பட்டது என்றும் 1 மாதத்தில் இந்த ஆடை செய்து முடிக்கப்பட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.
“எங்களது குழுவும், நானும் ஜேம்சுக்கு ஏதாவது ஒரு தனித்துவமான, அடையாளச் சின்னமான ஒரு ஆடையை இந்த ஆண்டு போட்டியில் அளிக்க வேண்டும் என்று விரும்பினோம். அதன் படி நாசி லெமாக் என்பது மலேசியாவில் மட்டுமே கிடைக்கக் கூடிய ஒரு உணவு. அனைவராலும் சுவைத்து மகிழக்கூடிய உணவு.எனவே அதையே ஆடையாகத் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தோம்.” என்றும் பிரியன் கூ தெரிவித்திருக்கிறார்.
வரும் நவம்பர் 26-ம் தேதி, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 66-வது மிஸ் யுனிவர்ஸ் அழகுப் போட்டி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.