கோலாலம்பூர் – ‘ப்ளூ ஐ புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அரங்கண்ணல் ராஜ் இயக்கத்தில், சிங்கை ஜெகன் கதாநாயகனாகவும், சீன நடிகை விவியாசான் கதாநாயகியாகவும், முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியமும் நடித்திருக்கும் ‘தோட்டம்’ திரைப்படம் வரும் நவம்பர் 23-ம் தேதி நாடெங்கிலும் வெளியீடு காணவிருக்கிறது.
இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று திங்கட்கிழமை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணன் தலைமையில், பி.ஜே.ஸ்டேட் திரையரங்கில் வெளியீடு கண்டது.
இதில், மலேசியக் கலைஞர்களும், முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இத்திரைப்படம் குறித்து டத்தோ சரவணன் பேசுகையில், “கிராமத்து மண்வாசனையை மையப்படுத்தி, தோட்டப்புற சூழலையும், அந்தத் தோட்டங்கள் துண்டாடப்பட்ட போது, நம்முடைய தமிழர்கள் எத்தகைய வேதனையை அடைந்தார்கள் என்பதைப் பற்றியும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் அற்புதமான படம்.”
“இந்தப் படத்திற்கு மலேசியர்கள், குறிப்பாகத் தமிழ் பேசக்கூடிய அத்தனை பேரும், நல்லாதரவை வழங்கினால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீண்டும் நல்ல திரைப்படங்களை நமது தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்க முடியும். எனவே அனைவரும் திரண்டு வந்து ஆதரவு கொடுங்கள். தமிழ் தமிழ் என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. தமிழன் வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. தமிழர்கள் வாழ்வதற்கும், தமிழ் நிலைத்திருப்பதற்கும் நாம் எழுந்து வந்து தொண்டாற்றினால் தான் வெற்றி பெற முடியும்” என்று டத்தோ சரவணன் தெரிவித்தார்.
இத்திரைப்படம் குறித்து இயக்குநர் அரங்கண்ணல் ராஜ் கூறுகையில், “பெரும்பாலும் வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றம். அந்த நாட்டின் விவசாய வருமானத்தைச் சார்ந்தே இருக்கின்றது. மலேசியாவும் அப்பட்டியலில் தான் உள்ளது. இன்றைய நவீன மலேசியாவின் முன்னேற்றத்தில் தோட்டம் பெரும் பங்கு வகித்திருக்கிறது. அப்படிப்பட்ட தோட்டங்களில் அதிக அளவில் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டவர்கள் இந்தியர்கள் தான். அதிலும் குறிப்பாகத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தோட்டங்கள் பல பெரும் வணிகச் சந்தைகளாக மாற்றப்பட்டுவிட்டன.”
“ஆனால் பல தலைமுறைகளாக உழைத்து வந்த அந்தத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டும் இன்னும் அப்படியே இருக்கின்றது. தமிழர்கள் உருவாக்கிய தோட்டங்கள் இன்று ஆதிக்கச் சக்திகளிடம் கைமாறி வருகின்றன. அப்படி கைமாற இருந்த ஒரு தோட்டத்தை தொழிலாளர்கள் எப்படி? போராடி மீட்டனர் என்பதைச் சொல்கிறது இப்படம். 200 வருடங்களாக நீடித்து வரும் இப்பிரச்சினையை இத்திரைப்படத்தின் மூலம் அலசியிருக்கிறோம்” என்று அரங்கண்ணல் ராஜ் தெரிவித்தார்.
மேலும், இத்திரைப்படத்தில், தமிழர், சீன மக்களிடையே நடந்த கலப்புத் திருமணங்கள் பற்றியும் பேசப்பட்டிருப்பதாக இயக்குநர் குறிப்பிட்டிருக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு சதீஸ் பி சரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாய் இசையமைப்பில், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலை மற்றும் மாணிக்க சண்முகம் ஆகியோர் பாடல் வரிகள் எழுதியிருக்கிறார். வினோத் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் சீனு இராமசாமி, நடிகர் ஆரி, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்மையில், நடைபெற்ற 8-வது நோர்வே திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தோட்டம் திரைப்படத்தின் முன்னோட்டம்: