கோலாலம்பூர், மார்ச் 26 – புதிதாகத் தொடங்கப்படும் ஏர் ஆசியா இந்தியா மலிவு விலை விமான நிறுவனத்தின் மூலம் இந்தியா-மலேசியா நாடுகளுக்கிடையிலான பயணச் சேவைகள் மேலும் விரிவாகும் வாய்ப்புக்கள் ஏற்படும் என அனைத்துல வர்த்தக, தொழிலியல் அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா முகமட் (படம்) கூறுகிறார்.
இந்த புதிய நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது குறித்து மலேசிய அரசாங்கம் மகிழ்ச்சியும், மன நிறைவும் கொள்வதாகவும் முஸ்தபா கூறியுள்ளார்.
இந்தியாவின் டாட்டா நிறுவனம் மற்றும் டெல்ஸ்ட்ரா டிரேட்பிளேஸ் (Telstra Tradeplace) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிய மலிவு விலை விமான நிறுவனத்தை ஏர் ஆசியா நிறுவனம் தொடங்குகின்றது.
இந்த புதிய நிறுவனம் ஏர் ஆசியா இந்தியா என அழைக்கப்படும். சென்னையைத் தளமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கும்.
“இந்த புதிய விமான நிறுவனம் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகள் அதிகரிக்கும் என நம்புகின்றேன்” என்றும் முஸ்தபா கூறினார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2013ஆம் ஆண்டுக்கான மலேசியா – இந்தியா வர்த்தக சம்மேளன மாநாட்டில் உரையாற்றும் போது முஸ்தபா இவ்வாறு கூறினார்.
அவரது உரையை அனைத்துல வர்த்தக தொழிலியல் அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் ரிபெக்கா பாத்திமா சந்தமாரியா வாசித்தார்.
-பெர்னாமா