சென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலை, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, அதிமுக அலுவலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், சிலை திறக்கப்பட்ட அன்றே, இணையவாசிகள் பலராலும் விமர்சிக்கப்பட்டது.
காரணம், அச்சிலையில் காணப்படும் உருவம் ஜெயலலிதா போல் இல்லையென்றும், வேறு யாரோ ஒருவர் போல் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இணையவாசிகள் சிலர், மறைந்த நடிகை காந்திமதி, நடிகை வடிவுக்கரசி என ஆளாளுக்கு ஒரு பெயரைச் சொல்லி அவர்களைப் போல் சிலையின் முகம் அமைந்திருப்பதாக கேலி செய்தனர்.
இதனால் சிலை வடிவமைப்பாளர் பிரசாத் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்.
இணையவாசிகளின் கேலியும், கிண்டலும் தன்னை மிகவும் காயப்படுத்திவிட்டதாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா சிலையில் திருத்தம் செய்யப் போவதாக அறிவித்த பிரசாத், அதற்கான பணிகளில் இறங்கியிருக்கிறார்.
இன்னும் 1 வாரத்தில் ஜெயலலிதாவின் முகம் போலவே மூன்று மாதிரிகள் உருவாக்கப்படும் என்றும், தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வதன் அடிப்படையில், அந்த முகம் சிலையில் பொருத்தப்படும் என்றும் பிரசாத் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார்.