Home நாடு தேர்தல்’ 14: தெலுக் கெமாங்: வி.எஸ்.மோகன் மீண்டும் வென்றெடுப்பாரா?

தேர்தல்’ 14: தெலுக் கெமாங்: வி.எஸ்.மோகன் மீண்டும் வென்றெடுப்பாரா?

1710
0
SHARE
Ad
டத்தோ வி.எஸ்.மோகன்

(மஇகா பாரம்பரியமாகப் போட்டியிட்டு வந்திருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளுள் ஒன்று, நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள போர்ட்டிக்சன் நகரை உள்ளடக்கிய தெலுக் கெமாங்.  இங்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் டத்தோ வி.எஸ்.மோகன் மஇகா இரண்டு தவணைகளாக இழந்த இந்தத் தொகுதியை மீட்டெடுப்பாரா? தொகுதியின் நிலைமையைத் தனது பார்வையில் ஆராய்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் 2008-ஆம் ஆண்டில்தான் மஇகா முதன் முதலாகத் தோற்றது என்பது உண்மையல்ல!

1969-இல்தான் இங்கு மஇகா முதலில் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் அப்போது இந்தத் தொகுதி போர்ட்டிக்சன் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

டத்தோ மகிமா சிங்
#TamilSchoolmychoice

நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட போர்ட்டிக்சன் தொகுதியை 1959 முதல் 1969 வரை மகிமா சிங் தாலிவால் கரம் சிங் (Mahima Singh Thaliwal Karam Singh) என்ற சீக்கிய மஇகா வேட்பாளர் தற்காத்து வந்தார் என்பது இன்னொரு சுவாரசியம். 1959-இல் நடந்த முதல் மலேசிய (அப்போது மலாயா) நாடாளுமன்றத் தேர்தலில் மகிமா சிங் போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியின்றி ஏகமனதாக வென்றார் என்பது அதைவிட சுவாரசியம்.

ஆனால், 1969 பொதுத் தேர்தலில் இங்கு ஜசெக சார்பில் போட்டியிட்ட சூரியன் அர்ஜூனன்  3,660 வாக்குகள் பெரும்பான்மையில் மகிமா சிங்கைத் தோற்கடித்தார். அத்துடன் மகிமா சிங்கின் அரசியல் மகிமையும் மஇகாவில் இருந்து மங்கியது.

அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த மகிமா சிங் 2005-ஆம் ஆண்டில்தான் தனது 99-வது வயதில் காலமானார்.

தெலுக் கெமாங் தொகுதியில் டத்தோ கு.பத்மநாபன்…

1974-ஆம் ஆண்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, போர்ட்டிக்சன் நகரை மையமாகக் கொண்டு தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியாக பெயர் மாற்றம் கண்ட இந்தத் தொகுதியில் முதன் முறையாக களமிறக்கப்பட்டார், டத்தோ கு.பத்மநாபன்.

உள்ளூர்க்காரரான இவர் அப்போது 8,579 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அப்போது முதல் 1990 வரை நான்கு தவணைகளுக்கு -16 ஆண்டுகளுக்கு அந்தத் தொகுதியை மிகச் சிறப்பாக மேம்படுத்தி, வென்று வந்தார் துணையமைச்சராகவும் இருந்த பத்மநாபன்.

டான்ஸ்ரீ டி.மாரிமுத்து

1990-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் துணையமைச்சராக – மஇகா தேசிய உதவித் தலைவராக – இருந்தும் அவருக்கு தெலுக் கெமாங் தொகுதி மறுக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக டி.மாரிமுத்து (தற்போது டான்ஸ்ரீ) வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவரும் 13,479 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

1995 பொதுத்தேர்தலில் மீண்டும் தெலுக் கெமாங்கின் வேட்பாளர் மாற்றப்பட்டார். இந்த முறை டத்தோ எல்.கிருஷ்ணன்! அவரும்  21,015 வாக்குகள் பெரும்பான்மையில் பிரமிக்கத்தக்க வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

1999-இல் அப்போதைய தேசியத் தலைவர் துன் சாமிவேலு மீண்டும் ஒரு வேட்பாளர் மாற்றத்தைத் தெலுக் கெமாங் தொகுதியில் செய்தார். அப்போது அவரது அரசியல் செயலாளராக இருந்த எஸ்.சோதிநாதன் (தற்போது டத்தோ) இங்கு போட்டியிடுவார் என ஆரூடங்கள் கூறப்பட்ட வேளையில், சிலாங்கூர் சிப்பாங்கைச் சேர்ந்த எஸ்.ஏ.அன்பழகன் என்பவரை இங்கு வேட்பாளராக நிறுத்தினார் சாமிவேலு. அவரும் 9,694 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். தொடர்ந்து சுகாதார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராகவும் பதவி வகித்தார்.

டத்தோ எஸ்.சோதிநாதன்

ஆனால், பதவிக்கு வந்த ஓராண்டிலேயே உடல் நலம் குன்றியதன் காரணமாக அன்பழகன் மரணமடைய 10 ஜூன் 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற தெலுக் கெமாங் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 1999 பொதுத் தேர்தலில் கைநழுவிப் போன வாய்ப்பு சோதிநாதனுக்கு அடுத்த ஓராண்டிலேயே கிடைத்தது.

சாமிவேலுவின் அரசியல் செயலாளராக அப்போது பதவி வகித்த – போர்ட்டிக்சனை பூர்வீகமாகக் கொண்ட – சோதிநாதன் தெலுக் கெமாங் இடைத் தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரும் 5,972 வாக்குகள் பெரும்பான்மையில் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று சுகாதாரத் துறை துணையமைச்சரானார். பின்னர் 2004 பொதுத்தேர்தலிலும் பிரமிக்கத்தக்க அளவில் 17,777 வாக்குகள் பெரும்பான்மையில் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார் சோதிநாதன்.

2008 அரசியல் சுனாமியில் தெலுக் கெமாங்கை பறிகொடுத்த மஇகா

2008-ஆம் ஆண்டில் மலேசியாவை மையம் கொண்ட அரசியல் சுனாமி போர்ட்டிக்சன் கடல்புறத்தையும் தாக்கியது. தெலுக் கெமாங்கில் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் டத்தோ கமாருல் பஹ்ரின் அப்பாஸ் 2,804 வாக்குகள் பெரும்பான்மையில் சோதிநாதனைத் தோற்கடித்து அந்தப் பொதுத் தேர்தலில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

டத்தோ கமாருல் பஹ்ரின் அப்பாஸ்

பின்னர் 2013 பொதுத் தேர்தலிலும் அவரே 1,579 வாக்குகள் பெரும்பான்மையில் இந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொண்டார்.

2013-இல் இங்கு போட்டியிட்டு தோல்வி கண்ட வி.எஸ்.மோகன்தான் எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலிலும் மஇகா வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. மஇகாவின் தகவல் பிரிவுத் தலைவராகவும் தற்போது இவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் போர்ட்டிக்சனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான், தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட டத்தோ வி.எஸ்.மோகன் பொருத்தமானவர் என்பதால் அவருக்கு ஆதரவு வழங்குவோம் என அறிவித்தார்.

பிப்ரவரி 26-ஆம் தேதி போர்ட்டிக்சனுக்கு பிரதமர் நஜிப் வருகை தந்தபோது…

அதைத் தொடர்ந்து பிரதமர் நஜிப்பும் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி போர்ட்டிக்சனுக்கு வருகை தந்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறார்.

மீண்டும் வென்றெடுப்பாரா வி.எஸ்.மோகன்?

வி.எஸ்.மோகன் தெலுக் கெமாங்கில் போட்டியிட மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவும் பச்சைக் கொடி காட்டி விட்டார் என்றும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, கடந்த பல மாதங்களாக மோகனும், தெலுக் கெமாங் தொகுதியில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் நெகிரி மந்திரி பெசார் முகமட் ஹசானுடன் வி.எஸ்.மோகன்…

கடந்த பொதுத் தேர்தலில் குறுகிய வாக்கு வித்தியாசத்திலேயே தெலுக் கெமாங் தொகுதியைப் பறிகொடுத்தாலும், மீண்டும் இந்தத் தொகுதியைக் கைப்பற்ற மோகன் கடும் போராட்டத்தை எதிர்நோக்க நேரிடும். காரணம் கடந்த 5 ஆண்டுகளில் மாறியிருக்கும் அரசியல் சூழ்நிலைகள்!

பிகேஆர் போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் எம்,இரவி

பிகேஆர் சார்பில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் 70 வயதாகிவிட்ட கமாருல் பாஹ்ரின் மீண்டும் இங்கு நிறுத்தப்படமாட்டார் என்ற நிலையில் பிகேஆர் கட்சியின் புதிய வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்துத்தான் மோகனின் வெற்றி வாய்ப்பும் அமையும்.

பிகேஆர் கட்சி சார்பில் போர்ட்டிக்சன் சட்டமன்ற நடப்பு உறுப்பினர் எம்.இரவி தெலுக் நாடாளுமன்றத்திற்கு நிறுத்தப்படலாம் என்ற ஆரூடங்களும் நிலவுகின்றன.

அவ்வாறு நிறுத்தப்பட்டால், 2008, 2013 என இரு தவணைகளாக போர்ட்டிக்சனில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் இரவி, தனது அனுபவத்தினால் இந்தத் தொகுதியில் மோகனுக்கு கடும் போட்டியை வழங்கக் கூடும்.

நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தைக் கைப்பற்ற இந்த முறை கங்கணம் கட்டிக் கொண்டு பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மிக முக்கிய அரசியல் போராட்டக் களமாக தெலுக் கெமாங் அமையப் போகிறது. காரணம், நெகிரியில் மொத்தமுள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் 5 தொகுதிகளை தெலுக் கெமாங் கொண்டிருக்கிறது.

2013 பொதுத் தேர்தலில் தெலுக் கெமாங் தொகுதி முடிவுகள்

பொதுவாக 2 அல்லது 3 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே நாடாளுமன்றத் தொகுதிகள் கொண்டிருக்கும் நிலையில், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மட்டும் சில தொகுதிகள் 5 அல்லது 6 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கின்றன.

தெலுக் கெமாங் தொகுதியில் உள்ள 5 சட்டமன்றங்களில் மூன்றை எதிர்க்கட்சிகள் வென்று தங்களின் கைவசம் வைத்திருக்கின்றன எஞ்சிய இரண்டை மட்டுமே அம்னோ தக்க வைத்துக் கொண்டுள்ளது.

போர்ட்டிக்சன் தொகுதியையும் மஇகா வெல்ல முடியுமா?

அமரர் டத்தோ டி.இராஜகோபாலு – போர்ட்டிக்சன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

தெலுக் கெமாங் தொகுதியின் கீழ் வரும் போர்ட்டிக்சன் தொகுதி மஇகாவுக்கு நெகிரியில் ஒதுக்கப்பட்டிருக்கும் இரண்டு தொகுதிகளில் ஒன்றாகும். 2008, 2013 பொதுத் தேர்தல்களில் போர்ட்டிக்சன் தொகுதியில் மஇகா வேட்பாளர்கள், பிகேஆர் கட்சியின் இரவியிடம் தோல்வியடைந்தார்கள்.

எனவே, தெலுக் கெமாங் நாடாளுமன்றம், அதன் கீழ் வரும் போர்ட்டிக்சன் என இரு தொகுதிகளையும் இழந்து நிற்கும் மஇகாவுக்கு இந்தத் தொகுதிகளை மீட்டெடுப்பது என்பது பெரும் கௌரவப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.

தெலுக் கெமாங் தொகுதியில் வெல்ல வேண்டுமானால் மஇகா அந்தத் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தாது, போர்ட்டிக்சன் தொகுதியிலும் கவனம் செலுத்த வேண்டும். 2013 புள்ளிவிவரங்களின்படி இந்திய வாக்காளர்கள் தெலுக் கெமாங் தொகுதியில் 21 விழுக்காடும் போர்ட்டிக்சன் சட்டமன்றத் தொகுதியில் 28 விழுக்காடும் இருக்கின்றனர்.

எனவே, தெலுக் கெமாங் தொகுதியை வெல்ல இந்திய வாக்குகளைக் கைப்பற்ற வேண்டியது மஇகாவுக்கு மிகவும் முக்கியமாகும்.

தினாளன் இராஜகோபாலு

இந்த முறை போர்ட்டிக்சன் தொகுதியில் வழக்கறிஞர் தினாளன் இராஜகோபாலு நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கும் மஇகா தலைமைத்துவம் பச்சைக் கொடி காட்டியிருப்பதால், இவரும் இங்கே தீவிரமாகக் களப்பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

2004 பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் தொகுதியில் வெற்றி பெற்று, நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி, அடுத்து வந்த 2008 பொதுத் தேர்தலில் அதே தொகுதியில் இரவியிடம் தோல்வியடைந்த அமரர் டத்தோ டி.இராஜகோபாலுவின் புதல்வர்தான் தினாளன்.

எனவே, மோகனுடன் இணைந்து இங்கு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் தினாளன் மீண்டும் போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அதன் மூலம் மஇகாவும் தன் கௌரவத்தை மீட்டெடுக்கும் என்பதோடு, தினாளனுக்கும் தனது தந்தை தோல்வியடைந்த தொகுதியில் நின்று மீண்டும் வெற்றி பெற்றோம் என்ற பெருமையும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

பாஸ், பெர்சாத்து கட்சிகளால் மலாய் வாக்குகள் பிளவுபடுமா?

PAS-Logoதெலுக் கெமாங் தொகுதியில் கவனிக்க வேண்டிய மேலும் இரண்டு முக்கிய அம்சங்கள், அம்னோவின் வலிமையும், பாஸ் கட்சியின் நிலைப்பாடும், பெர்சாத்து கட்சியின் வரவும்!

தெலுக் கெமாங் அம்னோ தொகுதியின் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ இசா சமாட், பெல்டாவின் முன்னாள் தலைவராக இருந்தபோது எழுந்திருக்கும் சில முறைகேடுகளால் அவரது தோற்றம் நாடு தழுவிய அளவில் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், உள்ளூர் அம்னோ மற்றும் மலாய் வாக்காளர்களிடத்தில் இன்னும் அவர் பெரும் செல்வாக்கைக் கொண்டிருக்கிறார் என்கின்றனர் உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள். கடந்த காலங்களில் நெகிரி மந்திரி பெசாராக அவர் வழங்கிய சேவைகளால் அவருடைய பங்களிப்பு இன்னும் நெகிரியில் போற்றப்படுகிறது. எனவே, இவரது பிரச்சாரமும் தெலுக் கெமாங்கில் வலு சேர்க்கும்.

பாஸ் கட்சி தெலுக் கெமாங் தொகுதியில் போட்டியிடுமா அல்லது ஒதுங்கிக் கொள்ளுமா – அவ்வாறு போட்டியிட்டால் அதன் மூலம் மலாய் வாக்குகள் எந்தத் தரப்புக்கு ஆதரவாகப் பிளவு படும் போன்ற கேள்விகளுக்கும் இப்போதைக்கு விடை கிடைக்காது. தேர்தல் முடிவுகள்தான் இந்த சிக்கலான கேள்விகளுக்கு பதிலைக் கொடுக்கும்.

மற்றொரு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றம், மகாதீர்-மொகிதின் தலைமையிலான பிரிபூமி பெர்சாத்து கட்சியின் வரவு. அம்னோவின் கட்டமைப்பையும், மலாய் வாக்கு வங்கியையும் பிளவுபடுத்தக் கடுமையாகப் பாடுபட்டு வரும் பெர்சாத்து கட்சி தெலுக் கெமாங் தொகுதியில் எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளது என்பதும், இந்தத் தொகுதியில் உள்ள எந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்பதும் தெலுக் கெமாங் தொகுதியின் இறுதி முடிவை நிர்ணயிக்கப் போகும் மற்ற சில அம்சங்கள்.

போர்ட்டிக்சன் கடற்கரை – இந்த முறை தெலுக் கெமாங்கில் அரசியல் காற்று வீசப் போவது எந்தப் பக்கம்?

2008 முதல் 2013 வரை ஜெரம் பாடாங் சட்டமன்ற உறுப்பினராக நெகிரி மாநில ஆட்சிக்குழுவிலும் இடம் பெற்ற மோகன் 2013-இல் 1,579 வாக்குகள் வித்தியாசத்தில் பறிகொடுத்த தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் வெற்றிகரமாகக் கைப்பற்ற வேண்டுமானால் உள்ளூர் மஇகாவிலும் எழுந்திருக்கும் சில சலசலப்புகள், எதிர்ப்புகளையும் தாண்டிவர வேண்டியிருக்கும்.

-இரா.முத்தரசன்