Home நாடு புத்ரா ஜெயாவில் தெங்கு அட்னானை எதிர்த்து வான் சைபுல்

புத்ரா ஜெயாவில் தெங்கு அட்னானை எதிர்த்து வான் சைபுல்

1118
0
SHARE
Ad
வான் சைபுல் வான் ஜான்

புத்ரா ஜெயா – எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைவராலும் உற்று நோக்கப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று புத்ரா ஜெயா.

அதற்கு ஒரு காரணம், கூட்டரசுப் பிரதேச அமைச்சரும், தேசிய முன்னணி தலைமைச் செயலாளருமான டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் தொகுதி என்பது! மற்றொரு காரணம், அரசு ஊழியர்களை பெரும்பான்மை வாக்காளர்களாகக் கொண்டு, மத்திய அரசாங்கத்தின் தலைமை அலுவலகங்களும், அமைச்சுகளும் அமைந்திருக்கும் வட்டாரம் என்பதால் இதனைக் கைப்பற்றுவது என்பது மத்திய அரசாங்கத்தையே கைப்பற்றுவது போன்ற தோற்றப் பிரமையை ஏற்படுத்தும்.

தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் – நடப்பு புத்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர்

பிரிபூமி பெர்சாத்து கட்சிக்கு புத்ரா ஜெயா ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மகாதீர் போட்டியிடக் கூடும் என்ற ஆரூடங்கள் மங்கி, அவர் லங்காவியில்தான் போட்டியிடுவார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னால் பெர்சாத்து கட்சியில் இணைந்த வான் சைபுல் வான் ஜான் இங்கே போட்டியிடுவார் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.

யார் இந்த வான் சைபுல்?

‘ஐடியாஸ்’ (IDEAS – Institute for Democracy and Economic Affairs) என்ற அரசு சாரா ஆய்வு மையத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக 9 ஆண்டுகள் பணிபுரிந்த வான் சைபுல் அந்தப் பதவியிலிருந்து விலகி பெர்சாத்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டது மலாய்க்கார சமூகத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

பொதுவாழ்க்கையில் அவ்வளவாக அறிமுகம் ஆகாதவர் இவர் என்றாலும், புத்ரா ஜெயா வட்டாரங்களில் இவர் நன்கு அறிமுகமானவர், பல அரசாங்க அதிகாரிகளுடன் நெருக்கமானத் தொடர்புடைகளைக் கொண்டிருப்பவர் என்பதால் இவரே புத்ரா ஜெயாவுக்குப் பொருத்தமானவர் என பெர்சாத்து கருதுவதாக அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்ரா ஜெயா – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

42 வயதான வான் சைபுல் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தான் கட்சியில் சேரவில்லை என்றும் பெர்சாத்து தலைமைத்துவம் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவதாகவும் கூறியிருக்கிறார். பெர்சாத்து கட்சியில் இணைந்தவுடனேயே, அக்கட்சியின் கொள்கை மற்றும் வியூகச் செயற்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 21 ஆண்டுகளாக பாஸ் கட்சியின் உறுப்பினராக இவர் இருந்து வந்தார் என்பது இவரது அரசியல் ஈடுபாட்டை எடுத்துரைக்கும் இன்னொரு கோணமாகும்.

நாட்டின் தேசியப் பிரச்சனைகள் குறித்து கருத்துரைக்கத் தான் விரும்புவதாகவும் அதற்குப் பொருத்தமான களம் பெர்சாத்து கட்சி என்பதாலேயே அக்கட்சியில் இணைந்ததாகவும் குறிப்பிட்டிருக்கும் வான் சைபுல், நாட்டின் சட்ட அமைப்புகளிலும், நடைமுறைகளிலும் சீர்திருத்தங்களும், மாற்றங்களும் செய்யப்பட வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

புத்ரா ஜெயா – 2013 முடிவுகள் என்ன?

கடந்த பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயா தொகுதியில் தெங்கு அட்னான் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் கட்சியின் ஹூசாம் மூசாவை 5,541 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார். 9,943 வாக்குகளை தெங்கு அட்னான் பெற, ஹூசாம் மூசா 4,402 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

தற்போது ஹூசாம் மூசா பாஸ் கட்சியிலிருந்து விலகி அமானா கட்சியில் இணைந்து விட்டார்.

2013 கணக்கெடுப்பின்படி 94 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்டிருக்கும் புத்ரா ஜெயா தொகுதியில் 3 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். மற்ற வாக்காளர்கள் 2 விழுக்காடுதான் இருக்கின்றனர். சீன வாக்காளர்கள் மிகக் குறைந்த அளவில் இருக்கும் தொகுதிகளில் ஒன்று புத்ரா ஜெயா ஆகும்.

-இரா.முத்தரசன்