Home Slider பிரதமருக்கு தீபக் ஜெய்கிஷன் பதிலடி

பிரதமருக்கு தீபக் ஜெய்கிஷன் பதிலடி

886
0
SHARE
Ad

deepakகோலாலம்பூர், ஜனவரி 18 – கம்பள வியாபாரியும், பிரதமர் குடும்பத்திற்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருபவருமான தீபக் ஜெய்கிஷன் தன்னுடைய நம்பகத்தன்மைப் பற்றி கேள்வி எழுப்பிய பிரதமருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்திய பிரமாண அறிக்கையின் உண்மை நிலையை பகிரங்கமாக வெளியிடும்படி தீபக் பிரதமரை வற்புறுத்தியுள்ளார்.

மங்கோலிய அழகி அல்தான்துன்யா சம்பந்தப்பட்ட கொலை வழக்கு தொடர்பில் தான் விரிவாக சொன்னது அனைத்தும் உண்மையே என்றும்,  பிரதமரின் பதில்தான் நம்பகத்தன்மை இல்லாததாக இருக்கின்றது என்றும் தீபக் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நடப்பு பிரதமர் என்ற முறையில் பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்திய பிரமாண அறிக்கையின் உண்மை நிலையை பற்றி பொதுமக்களுக்கு  அவரால் விளக்கமுடியுமா எனவும் தீபக் கோரிக்கை விடுத்தார். அதை விடுத்து ஒன்றும் செய்யாமல் வெறும் நாற்காலியை மட்டும் அலங்கரிக்கும் பிரதராக நஜிப் இருக்கக் கூடாது என்றும் தீபக் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மற்றும் அவர் மனைவியைப் பற்றி இதுவரை பல கடுமையான பழிகளை சுமத்தியுள்ள அந்த வணிகர் அவர்களை தனது குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிக்கும்படி பிரதமரை வற்புறுத்தினார்.

இரண்டாவது சத்திய பிரமாண விவகாரத்தில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் ஈடுபட்டுள்ளதையும் தனது மனைவி குறித்தும் பிரதமர் தான் வகிக்கும் உயர்ந்த பதவியைக் கருத்தில் கொண்டு நேரடியாக பதில் கூற வேண்டும் என்றும் முன்பு போல் சுமார் இரண்டு மாதம் கழித்து சாவகாசமாக “கருத்து சொல்ல ஒன்றுமில்லை” என மீண்டும் கூறுவதை விட்டுவிட வேண்டும் என்றும் தீபக் கூறினார்.

பிரதமரின் மௌனம் கலைந்தது

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தீபக்கின் குற்றச்சாட்டுக்கு தனது மௌனத்தை கலைத்து பிரதமர் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைசெய்யப்பட்ட மங்கோலியப்பெண் தொடர்பான பாலசுப்ரமணியத்தின் சத்தியப் பிரமாணத்தை மூடி மறைக்க நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் பிரதமரின் குடும்பத்திற்கும் தொடர்பு இருக்கின்றது என்ற தீபக்கின் குற்றச்சாட்டுக்கு பதலளிக்கும் விதத்தில் பிரதமர் தனது மௌனத்தைக் கலைத்து பதிலளித்துள்ளார்.

தீபக்கின் கூற்றுகள் நம்பகத்தன்மை இல்லாதது என்பதால் அவை குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் யாரும் அவரை நம்ப மாட்டார்கள் என்றும் பிரதமர் நேற்று கூறியிருந்தார்.

தீபக் கூற்றுப்படி பிரதமரும் அவரது மனைவியுமே தன்னை வற்பறுத்தி பாலசுப்ரமணியத்தை நெருக்குதல் தந்தோ, ஏதாவது பிரதிபலனாக தந்தோ, அவரது முந்தைய சத்திய பிரமாண அறிக்கையை மறுத்து இரண்டாவது சத்திய பிரமாண அறிக்கையை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டனர் என்று கூறியிருந்தார்.

செய்தியாளர் கூட்டத்தில் நேற்று இதனை மறுத்த பிரதமர் ‘ இது உண்மையல்ல. தீபக் உண்மையானவர் அல்ல’ என்று கூறியிருந்தார்.