Home நாடு சோதிநாதன் சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியா?

சோதிநாதன் சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியா?

1047
0
SHARE
Ad
டத்தோ எஸ்.சோதிநாதன்

கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத்தேர்தலில் பேராக் மாநிலத்திலுள்ள சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரும், நடப்பு மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ எஸ்.சோதிநாதன் போட்டியிடுவதற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் பச்சைக் கொடி காட்டி விட்டார் என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் கட்டமாக சோதிநாதன் சுங்கை சிப்புட் தொகுதிக்கான மஇகா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவார் என்றும், அதைத் தொடர்ந்து உரிய நேரத்தில் பிரதமர் துன் அப்துல் ரசாக் மற்றும் மஇகா தேசியத் தலைவரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மஇகா ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பின் மூலம், சோதிநாதன் உடனடியாக சுங்கை சிப்புட்டில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபடவும், தேர்தல் பணிகளைத் தொடக்கவும் முடியும்.

#TamilSchoolmychoice

சோதிநாதன் கடந்த திங்கட்கிழமையே (மார்ச் 12) ஈப்போ நகர் வந்து சுங்கை சிப்புட் தொகுதிக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார் என்றும், மஇகா பேராக் மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் சுங்கை சிப்புட்டிலுள்ள மஇகா தலைவர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து கள நிலவரத்தை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் மஇகா பேராக் மாநில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாமிவேலுவின் அரசியல் செயலாளராக அனுபவம்

திடீரென சோதிநாதன் சுங்கை சிப்புட்டில் வேட்பாளராகக் களமிறக்கப்படுவது மஇகா வட்டாரங்களில் தொடக்கத்தில் சற்று சலசலப்பையும், ஏன் சில எதிர்ப்புகளையும் கூட சந்திக்கலாம்.

சுங்கை சிப்புட் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

இருப்பினும், 2008, 2013 என இரு பொதுத் தேர்தல்களில் மஇகா தோல்வியடைந்த சுங்கை சிப்புட் தொகுதியில் இன்றைய நிலையில் கடுமையான போட்டி தரக்கூடிய அனுபவமும், ஆற்றலும் சோதிநாதனிடம் இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

காரணம், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவரிடம் சுமார் 13 மாதங்கள் அரசியல் செயலாளராகப் பணியாற்றியவர் சோதிநாதன்.

அந்த காலகட்டத்தில் சுங்கை சிப்புட் தொகுதியில் அலுவல் நிமித்தம் நிறையப் பணிகளை ஆற்றியிருக்கும் அனுபவத்தால், அந்தத் தொகுதியின் நீள, அகலங்களை பூகோள ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நன்கு அறிந்தவர் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

சாமிவேலுவிடம் அரசியல் செயலாளராக இருந்த காலகட்டத்தில்தான், சோதிநாதனின் சொந்த நகரான போர்ட்டிக்சனை உள்ளடக்கிய தெலுக் கெமாங் நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தல் நடைபெறும் சூழல் எழுந்தது. மஇகாவின் வேட்பாளராகப் போட்டியிட்டு தெலுக் கெமாங்கில் வென்ற சோதிநாதன் அடுத்து வந்த 2004 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

அந்த காலகட்டங்களில் சுகாதார துணையமைச்சராகவும் பணியாற்றினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், துணையமைச்சராகவும் சோதிநாதன் பெற்ற அரசாங்க அனுபவங்களும் அவர் இந்த முறை சுங்கை சிப்புட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தில் அவருக்கு பக்கபலமாக உதவக் கூடும்.

சுங்கை சிப்புட் மற்றும் மஇகா பேராக் வட்டாரங்களிலும் சோதிநாதன் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், கட்சியில் மத்திய செயலவை உறுப்பினர், தலைமைச் செயலாளர், தேசிய உதவித் தலைவர் என பல பொறுப்புகள் வகித்ததன் மூலம் மஇகா கிளைத் தலைவர்கள் மற்றும் அடிமட்ட உறுப்பினர்களிடையே சோதிநாதன் நல்ல அறிமுகத்தைக் கொண்டிருக்கிறார்.

மைக்கல் ஜெயகுமாரை வீழ்த்த முடியுமா?

டாக்டர் மைக்கல் ஜெயகுமார் – நடப்பு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர்

மேற்குறிப்பிட்ட அரசியல் ரீதியான தகுதிகளோடு, ஒரு மருத்துவரான டாக்டர் மைக்கல் ஜெயகுமாருக்கு நிகரான கல்வித் தகுதிகளையும சோதிநாதன் கொண்டிருப்பது, இந்தத் தொகுதிக்கான போராட்டத்தில் அவருக்கு சாதகமான அம்சங்களாக அமையலாம்.

மலாயாப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் முதல் நிலை தேர்ச்சியோடு (First Class Honours) பட்டம் பெற்ற சோதிநாதன் பின்னர் சட்டத் துறையிலும் பட்டம் பெற்று, தற்போது ஒரு வழக்கறிஞராகப் பணிபுரிகிறார்.

இவ்வாறு எல்லாத் தகுதிகளையும் கொண்டிருந்தாலும், கடந்த 2013 பொதுத்  தேர்தலில் 2,793 வாக்குகள் வித்தியாசத்தில் மஇகா இழந்த சுங்கை சிப்புட் தொகுதியில் – இப்போதைக்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையில் – மீண்டும் வெல்வது என்பது சோதிநாதனுக்குக் கடுமையானப் போராட்டமாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

எனினும், தனக்கிருக்கும் சவால்களை நன்கு உணர்ந்திருக்கும் சோதிநாதன் அதற்காக எல்லா முனைகளிலும் தயாராகி வருகிறார் என்றும் மைக்கல் ஜெயகுமாரைத் தோற்கடிக்கக் கடுமையாகப் பாடுபடுவார் என்றும் தெரிவிக்கின்றனர் அவருக்கு நெருக்கமான அரசியல் நண்பர்கள்.

சுங்கை சிப்புட் தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகும் 2 அம்சங்கள்

2013 பொதுத் தேர்தல் புள்ளிவிவரங்களின்படி சுங்கை சிப்புட் தொகுதியில் 33 விழுக்காடு மலாய் வாக்காளர்களும், 39 விழுக்காடு சீன வாக்காளர்களும், 21 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில், இரண்டு அம்சங்கள் சுங்கை சிப்புட் தேர்தலின் இறுதி முடிவை நிர்ணயிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

முதலாவது, சுங்கை சிப்புட் தொகுதியில் பாஸ் கட்சி தனித்துப் போட்டியிடுமா என்பது!  33 விழுக்காடு மலாய் வாக்காளர்களை சுங்கை சிப்புட் கொண்டிருக்கிறது. எனவே, பாஸ் இங்கே போட்டியிட்டால் அதனால் மலாய் வாக்குகள் எவ்வாறு பிளவுபடும் என்பதை வைத்து தேர்தல் முடிவுகள் அமையக் கூடும்.

மற்றொரு முக்கிய அம்சம், இங்கே மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் மைக்கல் ஜெயகுமார் தனது சொந்த கட்சியான பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா (பிஎஸ்எம்) கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது பிகேஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவாரா என்பது. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் ஜெயகுமார் பிகேஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டுத்தான் சுங்கை சிப்புட்டில் வென்றார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஆனால், இதுவரை பிஎஸ்எம், பிகேஆர், மற்றும் பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தேர்தல் உடன்பாடு எதுவும் இதுவரை ஏற்படவில்லை.

-இரா.முத்தரசன்