Home நாடு 430 மில்லியன் ரிங்கிட் நிச்சயமாக மலேசிய அரசிடம் வழங்கப்படாது – சுவிஸ் எம்பி திட்டவட்டம்!

430 மில்லியன் ரிங்கிட் நிச்சயமாக மலேசிய அரசிடம் வழங்கப்படாது – சுவிஸ் எம்பி திட்டவட்டம்!

1222
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சுவிட்சர்லாந்தினால் முடக்கப்பட்ட 1எம்டிபி நிதி, நிச்சயமாக மலேசிய அரசாங்கத்திற்குச் செல்லாது மாறாக, அரசு சாரா அமைப்புகளின் மூலம் மலேசிய மக்களின் நலத்திட்டங்களுக்கு சென்றடையும் என சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கார்லோ சொம்மாருகா தெரிவித்திருக்கிறார்.

ஜெனிவா நாடாளுமன்ற உறுப்பினரான கார்லோ சொம்மாருகா மலேசியாகினிக்கு மின்னஞ்சல் மூலம் அளித்திருக்கும் பதிலில், “சுவிஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும், முடக்கப்பட்ட 1எம்டிபி நிதி சிஎச்எஃப் 104 மில்லியன் (430 மில்லியன் ரிங்கிட்) மீதான தீர்மானத்தின் நோக்கம் அந்நிதியினை உரிமையாளரிடம் திருப்பிக் கொடுப்பதாகும்.”

“மலேசிய மக்களிடம் அந்நிதியினை திரும்ப அளிப்பதற்கு அரசியல் நெருக்கடிகள் மிக அதிகமாக இருக்கின்றன. அதேவேளையில், தேசிய கவுன்சிலில் அதற்கு ஆதரவான வாக்குகளும் அதிகமாக உள்ளன.”

#TamilSchoolmychoice

“என்றாலும், அந்த நிதி, மலேசிய அரசாங்கத்திடம் எந்தக் காரணத்திற்காகவும் வழங்கப்படாது. ஆனால், நேர்மையான அரசு சாரா அமைப்புகளின் மூலம் மலேசிய மக்களுக்குத் திரும்ப அளிக்கப்படும். வழக்கமாக இது போன்ற நிதிககளை அரசு சாரா அமைப்புகள் நலத்திட்டங்களின் வாயிலாக மக்களுக்கு அளிக்கும். குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களுக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டம் எந்த ஒரு ஊழலும் இன்றி நேர்மையான முறையில் நடக்கும் என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறது.”

“மேலும், நடப்பு மலேசிய அரசாங்கத்தின் ஊழலுக்கு, சுவிட்சர்லாந்து என்றுமே தீனி போடாது. எனவே சுவிட்சர்லாந்தின் இந்த முடிவை மலேசிய அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா? இல்லையா? என்பது முக்கியமே இல்லை” என கார்லோ சொம்மாருகா தெரிவித்திருக்கிறார்.

சுவிஸ் தேசிய கவுன்சிலில் கார்லோ சொம்மாருகா தாக்கல் செய்யவிருக்கும் முடக்கப்பட்ட 1எம்டிபி நிதி மீதான தீர்மானம் குறித்த விவாதம், நாளை மார்ச் 15-ம் தேதி மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில் நடைபெறவிருக்கின்றது. சுவிஸ் தேசிய கவுன்சிலில் அன்றைய நாளின் விவாதப்பட்டியலில் இத்தீர்மானம் 7-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

விவாதம் முடிந்த பின்னர், சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.