Home நாடு “முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்போம்” – மகாதீர் அறிவிப்பு

“முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்போம்” – மகாதீர் அறிவிப்பு

2016
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்போம் என பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் முகமது இன்று அறிவித்தார்.

தாய்மொழிக் கல்விக்கென ஆரம்பப் பள்ளிகள் இருக்கும்போது, இடைநிலைப் பள்ளிகளும் இருப்பதில் தவறில்லை என மகாதீர் கூறினார்.

இந்த முக்கிய அறிவிப்பைத் தவிர்த்து மேலும் 25 முக்கிய அம்சங்களை பக்காத்தானின் இந்தியர்களுக்கான தேர்தல் அறிக்கை கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்திய சமுதாயத்திற்கென பக்காத்தான் கூட்டணியின் பிரத்தியேக பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையை இன்று மாலை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சிவிக் சென்டரில் வெளியிட்டு உரையாற்றியபோது மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பிகேஆர் கட்சித் தலைவி வான் அசிசா, பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ஆகியோரும் உரையாற்றினர்.

“தற்போதிருக்கும் தேசிய மாதிரி ஆரம்பப் பள்ளிகள் மற்றும் அரசாங்க உதவி பெற்ற பள்ளிகள் என இருக்கும் வேற்றுமையை நீக்கி, நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளையும் அரசாங்க உதவி பெற்ற பள்ளிகளாக ஒரே மாதிரியாக மாற்றுவோம்” என்றும் மகாதீர் பலத்த கைத்தட்டல்களுக்கிடையில் அறிவித்தார்.

பக்காத்தானின் முக்கியத் தலைவர்கள் உட்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பக்காத்தானின் இந்தியத் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பக்காத்தானின் வியூகப் பங்காளிக் கட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும், மீரா நியூ ஜென் கட்சியின் தலைவர் ஏ.இராஜரத்தினம், ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

துன் மகாதீரின் தமிழ் இடைநிலைப் பள்ளித் திட்டத்திற்கு தனதுரையில் ஆதரவளித்துப் பேசிய லிம் குவான் எங், பினாங்கு மாநிலம் ஏற்கனவே இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதற்கான நிலத்தையும் ஒதுக்கியிருக்கிறது என்றார்.

ஆனால் கல்வி அமைச்சுக்கு தமிழ் இடைநிலைப் பள்ளி அமைப்பதற்காக விண்ணப்பித்தபோது, நாட்டின் கொள்கையோடு இந்தத் திட்டம் முரண்படுகிறது எனக் காரணம் காட்டி கல்வி அமைச்சு இந்தத் திட்டத்தை நிராகரித்து விட்டது என்றும் லிம் குவான் எங் கூறினார்.

பின்னர் உரையாற்றிய பிகேஆர் கட்சித் தலைவி டாக்டர் வான் அசிசாவும், தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கான தங்களின் கடப்பாட்டைத் தெரிவித்துக் கொள்வதாக பிகேஆர் கட்சியின் சார்பில் அறிவித்தார்.

-இரா.முத்தரசன்