Home நாடு நஜிப்பா? மகாதீரா? – தனது கருத்து நடுநிலையானது என்கிறார் ஜோகூர் இளவரசர்!

நஜிப்பா? மகாதீரா? – தனது கருத்து நடுநிலையானது என்கிறார் ஜோகூர் இளவரசர்!

1528
0
SHARE
Ad

Tunku-Ismail Johor Crown Princessஜோகூர் பாரு – ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக்கில் எழுதிய கருத்து பல தரப்பையும் திரும்பிப் பார்க்க வைத்ததோடு, ஆளுங்கட்சி, எதிர்கட்சி என இரு தரப்பிலுமே விமர்சனங்கள் எழுவதற்குக் காரணமாக அமைந்தது.

என்றாலும், தான் கூறிய கருத்தைத் தற்காத்துப் பேசியிருக்கும் துங்கு இஸ்மாயில், “கருத்துக் கூறுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கின்றது. எனது கருத்தை நான் தெரிவித்திருக்கிறேன். அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்” என மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கமான ஜோகூர் சதர்ன் டைகர்சில் நேற்று துங்கு இஸ்மாயில் வெளியிட்ட கருத்தில், “பிரச்சினைக்குரிய கேப்டன் காரணமாக கப்பலின் எஞ்சினையே மாற்ற வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கருத்துத் தெரிவித்திருந்த மகாதீர், “ஜோகூர் இளவரசரின் கருத்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைப் பாதிக்கும். எந்த வகையில் பாதிக்கும் என்றால், பக்காத்தானுக்கு இன்னும் கூடுதலான விளம்பரத்தைத் தான் ஏற்படுத்திக் கொடுக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், துங்கு இஸ்மாயிலின் கருத்திற்குப் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதனை சுட்டிக் காட்டியிருந்த மகாதீர், “நீங்கள் பொதுமக்களின் கருத்துகளை இன்ஸ்டாகிராம், யுடியூப் ஆகியவற்றில் பாருங்கள். அது தான் மக்களின் கருத்து. நானும் மக்களில் ஒருவன் தான். என்றாலும் நான் கருத்துக் கூற விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது கருத்துக் குறித்து விளக்கமளித்திருக்கும் துங்கு இஸ்மாயில், “நேற்று நான் கூறிய கருத்து எனது தனிப்பட்ட ஒன்று. அதை ஏற்றுக் கொள்வதற்கும், ஏற்றுக் கொள்ளாததற்கும் மக்களுக்கு உரிமை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் எந்தக் கருத்துக் கூறினாலும் அது ஜோகூர் மக்களின் நன்மைக்காக யோசித்து தான் கூறுவேன். உணர்ச்சிவசப்பட்டு கருத்துக் கூற மாட்டேன். இந்த நாட்டின் தலைவராக இருப்பவர் தான் சார்ந்த கட்சியின் சித்தாந்தத்தை மட்டுமே காப்பவராக இருக்கக் கூடாது. மக்களுக்காக சேவையாற்ற வேண்டும். அதற்காக தான் இங்கே, மேன்மைதங்கிய ஜோகூர் சுல்தான் இருக்கிறார், நான் இருக்கிறேன் மற்றும் தலைவர்கள் இருக்கிறார்கள்.

“நான் மகாதீர் முகமதுவையோ, நஜிப் அப்துல் ரசாக்கையோ அல்லது மற்றவர்களையோ ஆதரிக்கவில்லை. நான் மிகவும் வெளிப்படையாகப் பேசக் கூடியவன். நஜிப் தவறு செய்த போதும் கருத்துத் தெரிவித்தேன். மகாதீர் பிரச்சினையை ஏற்படுத்திய போதும் கருத்துத் தெரிவித்தேன்” என துங்கு இஸ்மாயில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், மலேசியாவிற்கு என்ன நடந்தாலும் அது உங்கள் பிரச்சினை எனக் குறிப்பிட்டிருக்கும் துங்கு இஸ்மாயில், ஜோகூரும், ஜோகூர் மக்களின் நன்மையும் தான் தமக்கு முக்கியம் என்றும், தனது தாத்தா, தந்தை போல தானும் ஜோகூரைப் பாதுகாப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.