Home நாடு பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது! தே.முன்னணிக்கு வாக்குகள் கிடைக்குமா?

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது! தே.முன்னணிக்கு வாக்குகள் கிடைக்குமா?

1142
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டின் பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் அனைத்துத் தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

வழக்கமாக சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் பொதுத் தேர்தல் வாக்களிப்பு இந்த முறை புதன்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுத் தேர்தல் வெற்றியைத் ‘திருடுவதற்கு’ தேசிய முன்னணி வகுத்துள்ள வியூகங்களுள் ஒன்றாக புதன்கிழமை வாக்களிப்பு பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதுவரையில் பொதுத் தேர்தலைக் கண்காணித்து வரும் அரசியல் ஆய்வாளர்கள் ஒட்டு மொத்தமாகக் கூறுவது என்னவென்றால், அதிகமான விழுக்காட்டினர் திரண்டு வந்து வாக்களித்தால் எதிர்க்கட்சிகள் வெல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதுதான்!

அதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில்தான் தேசிய முன்னணி புதன்கிழமையை வாக்களிப்பு தினமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

வேலை தினமாக இருப்பதால் பலர் வாக்களிக்க வர முடியாமல் போகலாம் – அதனால் வாக்குகள் குறையலாம் – தங்களுக்குத் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையலாம் என்பதுதான் தேசிய முன்னணியின் நோக்கம்.

பொதுவிடுமுறை வழங்கப்படுமா?

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல்கள் அதிகரித்து வருகின்றன.

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து, தேசிய முன்னணித் தலைவர்கள் பல்வேறு மழுப்பல் காரணங்களைக் காட்டி புதன்கிழமை வாக்களிப்பு தினம் நியாயம்தான் எனத் தற்காத்து வருகின்றனர்.

மக்களின் இந்த கொதிப்பு தேசிய முன்னணிக்கு எதிரான வாக்குகளாக மாறக் கூடிய அபாயங்களே அதிகம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நாடு முழுவதும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டால் ஓரளவுக்கு இந்த ஆத்திரம் தணியலாம். இருப்பினும், புதன்கிழமை வாக்களிப்பு தினம் என அறிவித்த அரசாங்கத்திற்குப் பாடம் கற்பிக்கும் விதமாகத்தான் வாக்காளர்கள் நடந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோதிடங்கள் – ஆரூடங்கள் என்ன சொல்கின்றன?

இதற்கிடையில், புதன்கிழமை வாக்களிப்பு தினம் என்பதை முன்னிட்டு பல்வேறு ஆருடங்கள், கணிப்புகள், இப்போதே புறப்பட்டு விட்டன.

புதன்கிழமை மலாய் மொழியில் RABU என்று குறிப்பிடப்படுகிறது. இதற்குப் புதிய அர்த்தம் ஒன்றை ஒரு சிலர் கண்டுபிடித்திருக்கிறார்கள். R.A.B.U – Rakyat Akan Buang UMNO – என்பதுதான் அது. அதாவது மக்கள் அம்னோவை தூக்கி எறிவார்கள் என்ற வாசகம்தான் அது!

சமூக ஊடகங்களில் உலவும் மற்றொரு ஆரூடம், சீன காலண்டர்படி மே 9 சீனத்தில் 24-ஆம் தேதியாக வருகிறதாம். 24 என்பது சீன மொழி உச்சரிப்பின்படி ‘நிச்சயம் மரணம்’ என்பதாம். எனவே, அன்றைய தினம் சீன பாரம்பரிய சாஸ்திரங்களின்படி நல்லதல்ல என்ற குறுஞ்செய்திகள் பரப்பப்படுகின்றன.

சரி! நமது இந்து ஜோதிட ஜாம்பவான்கள் என்ன சொல்கிறார்கள் என்று விசாரித்தோம்.

“மே 9 நவமி. இந்துக்கள், இந்திய ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அஷ்டமி, நவமி நாட்களில் எந்த நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். ஆளும் கட்சியில் இருப்பவர்கள் நவமி நாளில் செய்யும் செயல் தோல்வியில்தான் முடியும்” – என்பதுதான் நமக்குக் கிடைத்த விடை.

கடந்த ஒரு மாதமாக தேசிய முன்னணி அரசாங்கம் எடுத்த எந்த முடிவுகளும், நடவடிக்கைகளும், மக்களைக் கவரவோ, நடுநிலை வாக்காளர்களை ஈர்க்கவோ இல்லை.

பொய்ச் செய்திகள் சட்டம், தொகுதி எல்லைகள் சீர்திருத்தம், பெர்சாத்து கட்சியின் பதிவு ரத்து, இப்படிப் பல காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதில் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறது, புதன்கிழமை வாக்களிப்பு என்ற அறிவிப்பு.

‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள்.

அந்த புதன்கிழமையன்று, இத்தனை கண்டனங்கள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் தேசிய முன்னணிக்கு மக்களின் பொன்னான வாக்குகள் கிடைக்குமா?

-இரா.முத்தரசன்