சென்னை, மார்ச் 28- இலங்கையில் தனி ஈழம் குறித்து அங்கு வாழும் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை இந்தியா நிறுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேறியது. முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த இந்தத் தீர்மானங்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கும் போது இந்தத் தீர்மானங்களை அவர் கொண்டு வந்தார். இது குறித்து அவர் ஆற்றிய உரை:-
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்போரை தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வந்திருக்கிறேன். இந்திய அரசு இலங்கைத் தமிழர்களை அழிக்க ஆயுதங்கள், பயிற்சிகளை அளித்ததில் இருந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன்.
மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், அங்குள்ள தமிழர்கள் கண்ணியமாக வாழ வழி செய்யவும், அந்த நாட்டு அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்கவும் வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மீது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகக் கூடிய நிலையிலும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர்ந்து நடவடிக்கை:
இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைத் தடுத்து நிறுத்தினேன். இந்தியாவில் எங்கும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என பிரதமரை வலியுறுத்தினேன்.
இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நடைபெறும் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டேன். இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்து, அந்தப் போட்டியை நடத்துவதையே தமிழகம் கைவிட்டது.
மேலும், வரும் நவம்பரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை:
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில் கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினேன். ஆனால், வலுவான தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து, அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக மத்திய அரசு வாக்களித்தது. இந்த ஆண்டும் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா என்னென்ன திருத்தங்களை அளிக்க வேண்டுமென பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.
தீர்மானங்கள்:
உணர்வுப்பூர்வமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், இலங்கை அரசு அந்த நாட்டிலுள்ள தமிழர்களைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகிறது.
தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழர்களின் உணர்வுகளுக்கு, தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு சற்றும் மதிப்பளிக்காமல் பாராமுகமாக இருந்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.