புத்ரா ஜெயா: கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்றத் தொகுதியான புத்ரா ஜெயாவில் நடப்பு அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளரான தெங்கு அட்னானை எதிர்த்து, முன்னாள் மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் பெர்சாத்து கட்சியின் சார்பில் நிறுத்தப்படுகிறார்.
பெர்சாத்து கட்சியின் அபாரமான வியூகமாக இது பார்க்கப்படுகிறது. காரணம், முன்னாள் அரசாங்க ஊழியரான அப்துல் ரஷிட்டை நிறுத்துவதன் மூலம் புத்ரா ஜெயாவில் பெரும்பான்மையாக உள்ள அரசாங்க ஊழியர்களின் வாக்குகளைப் பெற முடியும் என பெர்சாத்து கட்சியும், பக்காத்தான் கூட்டணியும் கருதுகின்றன.
அப்துல் ரஷிட் பெர்சாத்து கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவருமாவார்.
அம்னோவின் தலைமைச் செயலாளர், தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளோடு, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் பொறுப்பையும் தெங்கு அட்னான் (படம்) வகித்து வருகிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் தன்னை எதிர்த்து பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹூசாம் மூசாவைத் தோற்கடித்து புத்ரா ஜெயா தொகுதியை 5,541 வாக்குகள் பெரும்பான்மையில் தெங்கு அட்னான் தற்காத்துக் கொண்டார்.
2004, 2008, 2013 என கடந்த 3 தவணைகளாக தெங்கு அட்னான் புத்ரா ஜெயா தொகுதியைத் தற்காத்து வருகிறார். அங்கு அவர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், இதுவரையில் அவரது பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
2013 புள்ளி விவரங்களின்படி 15,791 வாக்காளர்களைக் கொண்ட புத்ரா ஜெயா தொகுதியில் 94 விழுக்காடு மலாய்க்கார வாக்காளர்களாவர். சீனர்கள் ஒரே ஒரு விழுக்காடும், இந்தியர்கள் 3 விழுக்காடும் மற்றவர்கள் 2 விழுக்காடும் இருக்கின்றனர்.
அதிகமான மலாய் வாக்காளர்களைக் கொண்டிருப்பது, அதிலும் பெரும்பான்மையானவர்களாக அரசாங்க ஊழியர்களைக் கொண்டிருப்பது போன்ற காரணங்களுக்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் புத்ரா ஜெயாவும் ஒன்றாகும்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 15-ஆம் தேதி பெர்சாத்து கட்சி தனது அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும்போது அதில் அப்துல் ரஷிட்டின் பெயரும் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.